குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாநில சட்டமன்ற தீர்மானங்கள்
மாநிலங்களிலிருந்து வெளிப்படும் எதிர்ப்புகள் அரசமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாக்கவும் கூட்டாட்சி தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தவும் உருவாக்கப்படும் வேண்டுகோளாகும்.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
வெலரியன் ரோட்ரிக்ஸ் எழுதுகிறார்:
நாம் பத்திரிகைகளுக்கு செல்லும் முன்பே, குடியுரிமை திருத்தச் சட்டம்,2019க்கு எதிரான தீர்மானங்கள் - கேரளா, பஞ்சாப், இராஜஸ்தான், மேற்கு வங்கம்-ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன. இந்த மாநிலங்கள் மத்திய அரசை இந்த சட்டத்தை விலக்கிக்கொள்ளச் சொல்கின்றன. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிற்கு (National Population Register) தரவுகள் சேகரிக்கும்போது அந்த தகவல் தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் (National Register of Citizens, NRC) தொடர்புடையதாக இருந்தால் தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று தங்கள் மறுப்பை இந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்புக் குரலோடு மற்ற மாநிலங்களின் குரல்களும் சேரலாம். இந்த தீர்மானங்களில் ஒன்றாகப் பகிரப்பட்ட விஷயங்கள் இருக்கும்போது, ஒவ்வொரு மாநிலமும் முன்னிலைப்படுத்திய சில சிறப்பான குறிப்புக்கள் முக்கியமானவை. குடியுரிமை திருத்தச் சட்டம் “சமத்துவம், சுதந்திரம் மற்றும் மதச்சார்பின்மை“ ஆகிய கோட்பாடுகளை மீறியுள்ளதாக கேரளா கருதுகிறது. இந்தச் சட்டம் தேசப் பாதுகாப்பிற்கு ஊறுவிளைக்கும், இதனால் ஊடுருவல் அதிகரிக்கும் என்று பஞ்சாப் கூறியுள்ளது. இந்தச் சட்டத்தில் பாரபட்சத் தன்மை இயல்பாகவே இணைக்கப்பட்டுள்ளது என்று இராஜஸ்தான் கருதுகிறது. நாடு முழுவதும் இந்தச் சட்டத்தால் பதற்றமும் கிளர்ச்சிகளும் எவ்வாறு ஏற்பட்டுள்ளன என்று மேற்குவங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சட்டத்தால் ஆளப்படும் அரசாங்கத்தின் அஸ்திவாரத்தையே இந்தச் சட்டம் அசைத்துள்ளது என்றும் மேற்கு வங்கம் கூறுகிறது. அதே சமயம், இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளையும் வழிகாட்டுதல்களையும் அமைத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. தற்போதுள்ள எதிர்ப்புக்களை கருத்தில்கொண்டு, என்ஆர்சி மற்றும் என்பிஆர்-இடமிருந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பிரிக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் உள்ள அம்சங்களின் கீழ், குடியுரிமைக்கான விண்ணப்பங்களை மட்டும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளலாம்.
சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்களைத் தேடித்தேடி விலக்குவது என்ற கருத்தை நீங்கள் தள்ளி வைத்தாலும், வெளியேற்றப்படுவோம் அல்லது சிறையில் அடைக்கப்படுவோம் என்ற அச்சம் இருப்பது உறுதி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் உரிமை பெற வேண்டுமென்றால் இந்து, பௌத்தம், சீக்கியம், சமணம், கிறித்தவம் அல்லது பாரசீகம் ஆகிய ஆறு மதங்களில் ஒன்றைச் சார்ந்திருக்க வேண்டும். இந்த வகைப்பாட்டில் முஸ்லிம்கள் இல்லை. இந்த நடவடிக்கையை 2022ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் வாக்காளர்களை ஒருமுகப்படுத்த செயல்படுத்தலாம். அசாமில் ஏற்கெனவே உள்ள பிரிவை இந்தச் சட்டம் உறுதிப்படுத்தும். இந்திய தேசியம் என்ற கருத்தியலைச் சுற்றியுள்ள அனைத்து உணர்வு பூர்வமான ஆற்றல்களையும் ஒருங்கிணைக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம். இந்திய தேசியம் என்ற இந்தக் கருத்தியல் இந்து ராஷ்டிரம் என்ற கருத்தியலோடு ஒத்துப்போகக்கூடியதாகும். இந்தியாவின் அண்டைநாடுகளில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள நாடுகளைப் பிரித்துக்காட்டும் சட்டமாகும்.
இந்தியாவில் குடியுரிமையில் சமத்துவம் என்ற கருத்தியல் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையில் வரவில்லை. ஒவ்வொரு குடிமகனையும் குடிமகனாகக் கருதி சமத்துவத்தை அளிக்கும் நோக்கிலேயே அளிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையை, குடியுரிமைத் திருத்தச் சட்டம் முற்றிலுமாக மாற்றுகிறது. குடியுரிமையை ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்ற அடிப்படையில் கட்டமைக்கிறது. இதிலிருந்து விலக்கப்பட்ட சமூகங்களைச் சேந்தவர்கள் மீது இது முற்சாய்வான அவமதிப்பை குவிக்கிறது. இந்தக் கருத்து வெளிப்படையாகவே, ஒருசில குறுகிய பார்வை உள்ளவர்களைத் தவிர எல்லோருக்கும் புரிகிறது. அது சில சமூகத்தைச் சார்ந்திருப்பதை அத்தியாவசியமாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை பெற்றிருக்க வேண்டும் என்று மக்களை வலியுறுத்துகிறது. மதச்சார்பற்ற சமூக ஒற்றுமைகளைக் கண்டிக்கிறது. எனவே, சில மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றியதன் பின்னால் குறிக்கோள் சார்ந்த ஆதாரங்கள் வலுவாக உள்ளன.
1980களிலிருந்தே இந்தியாவில் ஒரு கட்சி ஆதிக்கம் குறைந்து வந்துள்ளது. இதனால் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தில் ஒரு புதிய சமநிலை உருவாகியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள உறவுகளை மீண்டும் புதுப்பிப்பது அடிப்படையாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நன்மை பயக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பஞ்சாயத்து நிறுவனங்களும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம், ஆதாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் விரும்பக்கூடிய அளவிற்கு வழங்கப்பட்டன. ஆறாம் அட்டவைணையின் கீழ் வரும் மாநிலங்களில் உள்ள மாவட்ட கவுன்சில்களும் நாட்டில் ஆங்காங்குள்ள பட்டியலிட்ட பகுதிகளும் பழங்குடியினர் கூடும் இடமாக இருந்தன. சிறிய அளவிலான புதிய மாநிலங்கள் உருவாகின. மிகப்பெரிய மாநிலங்களான உத்தர பிரதேசத்தைப் போன்ற மாநிலங்கள் சிறிய அளவில் பிரிக்கப்படுவதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. ஒட்டுமொத்தமாக சொல்வதென்றால், அதிகாரம் மற்றும் பொறுப்பை பகிர்ந்து அளிப்பதற்கான ஆரோக்கியமான போக்கு மேற்கொள்ளப்பட்டு சாமான்ய மக்கள் பங்கேற்பது சாத்தியமாக்கப்பட்டது. குடிமக்களையும் நிர்வாகத்தையும் இணைத்து, நிர்வாகத்தை பொறுப்புள்ளதாக மாற்ற முடிந்தது.
ஒருங்கிணைந்த கூட்டாட்சித் தத்துவம் என்ற பிரதமரின் ஆரம்ப கால தத்துவங்களுக்கு முரணாக 2014ஆம் ஆண்டிலிருந்தே முற்றிலும் மாறான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. துவக்கத்தில் இந்தப் போக்கு மெதுவாக இருந்தாலும், தேசிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் (அதாவது 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து) முதுகெலும்பு உடையும் வேகத்தில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் பாரதீய ஜனதாகட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வலுவான கட்சி இயந்திரத்தினால் தூண்டப்பட்டு இன்றைய பாஜக செயல்படுகிறது. எங்கும் பரவியுள்ள மத்திய அரசின் அதிகாரம் பொதுமக்கள் கீழ்படிந்து இருக்க வேண்டும் என்ற கலாச்சாரத்தை வளர்த்து விடுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் முறைசார்ந்த அம்சங்கள் இன்னும் அப்படியே இருந்தாலும், அவை மத்திய அரசின் ஆணைக்கு ஒத்துப்போகும்படியோ அல்லது அதற்காக தள்ளிப்போடும்படியோ அமைக்கப்பட்டுள்ளன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான மாநிலங்களின் தீர்மானங்களை இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களுக்கு எதிரான வெறும் வெளிப்பாடாக மட்டும் பார்க்கக்கூடாது, கூட்டாட்சித் தத்துவத்தை மீண்டும் நிலைக்கச் செய்யும் வேண்டுகோளாகவும் பார்க்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் போன்ற சட்டத்தினால் சில மாநிலங்களில் தீவிரமான சமூக அரசியல் விளைவுகள் ஏற்படும். இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவதில் இந்த மாநிலங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லை என்று கூட கூறலாம். மேலும், இந்த மாநிலங்கள் முற்றிலும் மாறுபட்ட கருத்தியலை கொண்ட கட்சிகளால் ஆளப்படுகின்றன. இந்தச் சட்டத்தின் அம்சங்களை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எப்படிக் கருத முடியும். அந்தக் கட்சிகளின் மிக முக்கிய குறிக்கோள்களை இந்தச் சட்டம் குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்ல, அவர்களின் குரலை ஏற்றுக்கொள்ளவேயில்லை. இந்தச் சட்டம் குடியுரிமையை பிரித்து வைத்து, வெறுப்பை பரப்புகிறது. அரசமைப்புச் சட்டததின் அடிப்படைக் கூறுகள் என்று அவர்கள் நம்பும் அம்சங்களை கீழே தள்ளுகிறது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் சரியாக விவாதிக்கப்படவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதனை ஒரு நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இந்தியாவில் குடியுரிமை என்பது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்றாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு அடிப்படைக் குறிக்கோள்களைப் பாதிக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கு மாநிலங்களுக்கு உள்ள ஒரே வழி அவர்களது மறுப்பை வெளிப்படுத்தி ஓங்கி குரல்கொடுப்பதுதான்.