ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

உத்தர பிரதேசத்திற்கான எதிர்க்கட்சிகளின் உத்தி

தனது தனித்துவத்தை நிலைநாட்ட காங்கிரஸ் எடுக்கும் நிலைபாடு இன்றைய அரசியலில் முதன்மையான விஷயங்களை பற்றிய அதன் தெளிவின்மையைக் காட்டுகிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் (உபி) ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் இப்போது மத்தியிலுள்ள ஆளும் கட்சிக்கு எதிரான சக்திகளை வலுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கும் (பசக) சமாஜ்வாதி கட்சிக்கும் (சக) இடையிலான கூட்டணியானது பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) உபி தேர்தல் வெற்றியை பெரிதும் பாதிக்கக்கூடிய வலுவான தேர்தல் மற்றும் சமூகக் கூட்டணியாக இருக்கும். மேலும், பிரியங்கா காந்தி வதேராவை காங்கிரசின் பொதுச் செயலாளராகவும், கிழக்கு உபி-யின் பொறுப்பாளராகவும் நியமித்திருப்பது 2019 மக்களவை தேர்தலில் காங்கிரசின் வெற்றிவாய்ப்புகளை மேம்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது. பாஜக மத்தியில் ஆட்சியமைத்த போதெல்லாம் அது உபி-யில் நான்கில் ஒரு பங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெற்றே ஆட்சியமைத்திருக்கிறது என்கிற அளவிற்கு பாஜகவிற்கு உபி முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே உபி-யில் பெரும் தோல்வி என்பது வருகிற பொதுத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கான எச்சரிக்கை அறிகுறியாகத் தெரிகிறது.

பாஜகவை தோற்கடிப்பதற்கான அடித்தளம் என்பது வலுவான சமூக அடிதளத்தைக் கொண்ட பசக மற்றும் சக கூட்டணியே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த இரண்டு கட்சிகளுடன் தொடர்புடைய சமூகக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளில் வேர்கொண்டுள்ள இந்த இரண்டு கட்சிகளுக்கிடையிலான நீண்ட கால பகைமையை மீறி இவை இரண்டும் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், ஆதித்யநாத் ஆட்சியால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் இந்துத்துவா உயர் சாதி ஆக்ரோஷம்/ஆதிக்கத்திற்கு எதிராக பசக மற்றும் சக-க்கு இடையிலான முரண்பாடுகள் அமைதியாகிவிடுகின்றன அல்லது இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. ஆகவே, பசக-சக இடையிலான கூட்டு என்பது தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கானதோ அல்லது அரசியல் லாபத்திற்கானதோ மட்டும் கிடையாது. இரண்டு கட்சிகளின் சமூக தளங்கங்களிலிருந்து தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்சிகளும் கைகோர்த்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் பிற எதிர்க்கட்சிகளையும் துணையாக சேர்த்துக்கொண்டால் அது ஆளும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ள வாக்காளர்கள் ஒன்றுதிரள வாய்ப்பாக அமையும். கூட்டணிக்குள் ராஷ்டீரிய லோக் தளம் அல்லது நிஷாத் போன்ற கட்சிகள் சேர்த்துக்கொள்ளப்படும் என்றபோதிலும் காங்கிரஸ் இதன் அங்கமாக இல்லை. ஒரு துணைப் பாத்திரமாக இருந்து ஒரு சில இடங்களில் மட்டுமே போட்டியிடும் நிலையை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக இல்லாததால் ஏற்பட்ட நிலை இது. அகில இந்திய கட்சி என்ற தனது சிறப்புத் தகுதியிலிருந்து இறங்கிவருவதாக இது பார்க்கப்படும் என அக் கட்சி அஞ்சுவதாகத் தெரிகிறது. உபி-யில் கட்சிக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம் இந்த சிறப்புத் தகுதிக்கு அழுத்தம் தருவதற்கான முயற்சியே பிரியங்கா காந்தி வதேராவின் அரசியல் நுழைவு.

பிரியங்காவின் நுழைவு அதிரடி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் உபி-யில் இப்போது காங்கிரசுக்குள்ள பலத்தை வைத்து அது மூன்றாவது சக்தியாக எழுமா அல்லது முதன்மையான போட்டியாளராக இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. மூன்றாவது சக்தியாக இருப்பது என்பது பசக-சக கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பாத பாஜகவின் உயர் சாதி வாக்கு வங்கியை பிரிப்பதாக இருக்குமென பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால் இத்தகைய அலசல், அதிலும் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சாதியினரின் போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், உயர் சாதியினரின் அரசியல் புத்திசாலிதனத்தை, குறைத்து மதிப்பிடுகிறது. மேலும், எதிர்க்கட்சிகளிடையே சிறிய அளவிலேனும் பிளவுபடும் வாக்குகளினால் ஏற்படும் ஆபத்தையும் இந்த அலசல் குறைத்து மதிப்பிடுகிறது. தனது தனித்துவமான நிலையை நிலைநிறுத்த வாக்குகளை பிரிக்கும் ஆபத்தில் காங்கிரஸ் ஈடுபவது அரசியலில் முதன்மையான விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றிய அதன் குழப்பமான புரிதலையே காட்டுகிறது.

இந்தப் பொதுத் தேர்தலின் பின்னணியில் ஆகப் பெரும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், சாத்தியமான நோக்கங்களாக மூன்றை முன்வைக்கலாம். ஒன்று, நாட்டு மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களை மட்டுமல்ல, நாட்டின் சமூக அடித்தளத்திற்கே ஆபத்து ஏற்படுத்தியிருக்கும் இன்றைய ஆட்சியை அகற்றுவது; இரண்டு, தனது கட்சி அமைப்பை மறுபடியும் கட்டியமைப்பது, தனது தனிப்பட்ட  செல்வாக்கை வளர்ப்பது; மூன்று, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரை பிரதமராகக் கொண்டுவருவது. சாதாரணமாக, இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்லது ஒன்றையொன்று விலக்குவன அல்ல. ஆனால், கட்சியின் இன்றைய நிலை, மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல் ஆகியவற்றின் காரணமாக இந்த நோக்கங்களில் எது முதனமையானது என்பதை அது தீர்மானிக்கவேண்டும். முதலில் சொல்லப்பட்டதுதான் முதன்மையான நோக்கம் என்று காங்கிரஸ் இயல்பாகவே கூறும். இதை சாதிக்க பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒன்றுதிரட்டவேண்டும். எதிர்க்கட்சி முகாமைச் சேர்ந்த தலைவர்கள் குறிப்பிடுவதைப்போல் ஒவ்வொரு மாநிலத்திலும் இதை சாதித்தாக வேண்டும். இதனடிப்படையில் தர்க்க ரீதியாக பார்த்தால் இரண்டாவது நோக்கத்தை தள்ளிவைக்க வேண்டும் (காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள மாநிலங்களில் பிற கட்சிகளுக்கும் இது பொருந்தும்), தனிநபர் விழைவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும். இதைச் செய்வதை காங்கிரஸ் விரும்பாததன் விளைவே அது உபி-யில் தனித்து போட்டியிட்டு, மும்முனை போட்டிக்கு வழிவகுத்திருப்பதாகும். “எதிராளியை திறனுடன் எதிர்கொண்டிருப்பதாக” தனது நிலையை காங்கிரஸ் வர்ணிக்கக்கூடும்,  ஆனால் வேறு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தான் இழுக்கப்படுவதை அது காட்டிக்கொள்கிறது.

நடைமுறை சாத்தியம் மட்டுமே எப்படி பசக-சக கூட்டணிக்கான அடிப்படை காரணமாக இல்லாமல் ஆழமான சமூக சக்திகளும் காரணமாக இருக்கிறதோ அதைப்போலவே கூட்டணிகள் அமைப்பதில் அந்தந்த மாநிலங்களுக்குரிய தனித்தன்மைகளை அங்கீகரிப்பது என்பது உத்தி பொறுத்த விஷயம் மட்டுமல்ல. அதன் வேர்கள் நாட்டின் பன்முகத்தன்மையிலும் சமனற்ற சமூக-அரசியல் யதார்த்தத்திலும் இருக்கிறது. தனது ஒருபடித்தானதாக்கும் மற்றும் சர்வாதிகார அரசியல் திட்டத்தின் காரணமாக பாஜகவும், சங் பரிவாரமும் இந்த பன்முகத்தன்மையை ஒடுக்க, அழிக்க தொடர்ந்து முயன்றுவருகின்றன. இது இறுதியில் அதன் அழிவிற்கானதாக இருக்கும். பாஜகவின் அரசியல் திட்டத்திற்கு மாற்றாக இருக்கக்கூடியது, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் சமனற்ற யதார்த்தத்தை தனது அமைப்பினுடைய வடிவில் மற்றும் திட்டத்தின் உள்ளடக்கத்தில் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். ஆனால், இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்வதில் காங்கிரசுக்கு உள்ள தயக்கம் மற்றும் தன்னை மட்டுமே இந்திய சமூக யதார்த்தத்தை உண்மையாக பிரதிபலிக்கக்கூடிய அமைப்பாக பார்ப்பதானது ஒரு மாற்றை உருவாக்குவதில் வினையூக்கியாக தான் செயல்படுவதிலிருந்து தன்னையே தடுத்துக்கொள்கிறது. பாஜக அல்லாத கட்சிகளிலேயே ஆகப் பெரிய கட்சியாக இருப்பதன் காரணமாகவே தலைமைப் பொறுப்பு அதன் கைக்கு வரக்கூடும். ஆனால் அத்தகைய பொறுப்பு பிற அரசியல் சக்திகளின் உரிமைகளையும் அங்கீகரித்து, தனிப்பட்ட இலக்குகளை ஒதுக்கிவைப்பதன் மூலமே சாத்தியம். நாட்டின் ஆகப் பெரிய மாநிலத்தில் அதன் செயல்பாடுகளை பார்க்கிறபோது காங்கிரஸ் இந்த விஷயத்தில் இன்னமும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது தெரிகிறது.

Back to Top