ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

கண்காணிப்பின் கீழ் ஜனநாயகம்

குடிமை மற்றும் மனித உரிமைகளுக்கான நேரடி கண்காணிப்பு உலகளாவிய பிரச்சினையாக உள்ளது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

நமது ஜனநாயகம் கண்காணிப்பின் கீழ் உள்ளது. அரசமைப்புச் சட்ட விதிகளுக்குட்பட்டு, தனிநபர்கள் பேச்சுரிமையையும் கருத்து சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. பெகாசஸ் என்ற உளவறியும் மென்பொருளின் துணையுடன் பல இந்தியர்கள் கண்காணிக்கப்படுவதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் மூலம் தரவுகளை சமரசம் செய்து இந்த பெகாசஸ் இயங்குகிறது. ஒருமுறை பதிவிறக்கப்பட்டால், இந்த உளவறியும் சாதனமானது அழைப்புக்கள், தகவல்கள், கடவுச்சொற்கள் மற்றும் தொடர்பு பட்டியல்கள் என ஒரு மொபைல்ஃபோனின் அத்தனை தரவுகளையும் அளிக்கும். இந்த அலைபேசியின் அருகில் நடக்கும் செயல்பாடுகளை படம்பிடிக்க அலைபேசியின் காமிராவையும் மைக்ரோஃபோனையும் இதனால் தானாகவே இயக்க முடியும்.

இந்த உளவறியும் சாதனமான பெகாசசின் உரிமையாளர்கள் இஸ்ரேலிய என்எஸ்ஓ குழும தொழில்நுட்பங்கள் என்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் சேவைகளை சௌதி அரேபிய அரசு தன் மக்களை உளவறிந்து, அவர்களை பின்தொடர்ந்து அச்சுறுத்தப் பயன்படுத்துகிறது. வாஷிங்டன் போஸ்ட்டின் பத்தி எழுத்தாளரும் அரசு எதிர்ப்பாளருமான ஜமால் கஷோக்கியை 2018ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் இந்த முறையைப் பயன்படுத்தித்தான் கொலை செய்தனர். பெகாசஸ் உளவுபொருள் குறித்து இந்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதில், நழுவும் விதத்தில் உள்ளது. தேசிய பாதுகாப்பு என்ற கட்டமைப்பின் கீழ் அது சார்ந்திருந்தது. தற்போதுள்ள சட்டங்களின்படி, தேசிய பாதுகாப்பு அல்லது பொதுப் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய அரிதான அவசரகால சூழல்களில் குறிப்பிட்ட தொடர்புகளைக் குறுக்கீடு செய்வதற்கு அரசிற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் எல்லாவற்றிற்கும் தேசிய பாதுகாப்பைப் போர்வையாக பயன்படுத்த முடியாது என்று, கே எஸ் புட்டசாமி (எதிர்) இந்திய அரசு, 2018 வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இத்தகைய அதிதீவிரமான ஊடுருவல் முறையிலான கண்காணிப்பினால் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் கணிசமானவர்கள் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவார்கள். அரசுக்கு எதிராகக் கருத்து வெளியிடும் இந்தத் தனிநபர்களின் அறிவும் கருத்துக்களும் தேசிய பாதுகாப்பு அக்கறையை வெளிப்படுத்துகின்றன. அரசின் பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அவர்களது கேள்விகள் அரசுக்கும் அதிகார மையத்திற்கும் அச்சுறுத்தல் விளைவிப்பவையாகத் தோன்றலாம். அரசின் இலக்குகளை நாம் கேள்விக்குள்ளாக்கினால், இத்தகைய கருத்துக்களை உருவாக்குபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள், அவர்கள் மீது தீவிரமான நடவடிக்கைகள் நிச்சயம் எடுக்கப்படும்.

26/11 மும்பை தாக்குதல்களின்போது உளவுப்பிரிவில் ஏற்பட்ட தோல்விகளால், தங்களது தரவுகளின் அடித்தளத்தை விரிவாகக் கட்ட இந்தியா முயற்சி செய்கிறது. மிகப் பெரிய மக்களைக் கண்காணிக்கும் தரவு அடித்தளத்தை கட்ட இந்திய அரசு பெருந்தொகையைச் செலவிடுகிறது. நெட்கிரிட் என்ற தேசிய உளவு பகிர்மானம், மத்திய கண்காணிப்பு அமைப்பு (சிஎம்எஸ்),  குற்றத்திற்கான முகத்தை தானாகவே உணரும் தேசிய அமைப்பு மற்றும் குற்றவாளிகளைப் பின்தொடரும் வலைப்பின்னலும் அமைப்பும் (National Automated Facial Recognition System of Crime and Criminal Tracking Network and Systems, CCTNS), இணைந்து ஒரு காவல்துறை அரசினை (police state) உருவாக்க உதவுகின்றன. இத்தகைய கண்காணிப்பிற்கு சவால்விடக்கூடிய அமைப்போ அல்லது இதனைத் தவறாக பிரயோகிப்பதைத் தடுக்கக்கூடிய சட்டரீதியான பாதுகாப்புகளோ எதுவும் கிடையாது. இத்தகைய அமைப்புக்களின் கட்டமைப்பு அதிகரித்து வருவது எதைக் காட்டுகிறது என்றால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எவரையும் அரசு மெதுவாகக் கண்காணிக்கும் திறனைப் பெறும் என்பதைக் காட்டுகிறது. இந்தத் தரவு பெட்டகங்கள் யதார்த்தமாக மாறிவரும் வேளையில், இந்தியாவில் கண்காணிப்பை ஒழுங்குபடுத்துவதில் நாம் பத்து ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம் என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். சட்டத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு நிர்வாக ஆணையை பயன்படுத்தி இவ்வாறு தகவலைப் பெறுவது தீவிர கவலைக்குரிய விவகாரம். எடுத்துக்காட்டாக, போதுமான சட்ட அமைப்பும் இல்லாமல், போதுமான தரவு பாதுகாப்பு அமைப்பும் இல்லாமல், சட்டத்தின் அனுமதி இல்லாமல் ஆதார் திட்டத்தை நிர்வாகத்துறை அழுத்தமாகத் தள்ளியது. தற்போது இந்த திட்டத்தில் போதுமான பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தனிநபர் அந்தரங்கத்திற்கான நமது உரிமையும் அதில் ஒன்று. அந்த உரிமைகள்மீது என்எஸ்ஓ குழும தொழில்நுட்பங்கள் அமைப்பு போன்ற நிறுவனங்கள் குறுக்கிட அனுமதிப்பது அபாயகரமான விதிமீறலாகும். எந்தவிதமான முறையான அமைப்பும் இல்லாமல் இவ்வளவு கவனக்குறைவாக பாதுகாப்பு நிறுவனங்கள் ஒரு தனிநபரின் அந்தரங்க உரிமையைப் பறிக்க முடியாது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் கோராத வகையில் அதனை மீற முடியாது. சமீபத்தில் வெளியிடப்பட்ட பம்பாய் உயர் நீதிமன்ற தீர்ப்பு இதற்கான வழியைக் காட்டியுள்ளது. ஓர் ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு நிறுவனம் சட்டவிரோதமான கண்காணிப்பை பயன்படுத்தி தடயத்தை வெளியிட்டதை நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்தத் தடயங்களை நீதிமன்றம் மறுத்தது மட்டுமல்ல, இந்த அனைத்து தகவல்களும் அழிக்கப்பட வேண்டும் என்று நிர்பந்தித்தது. எனவே மத்திய புலனாய்வு நிறுவனத்தின் கண்காணிப்பு தேவைப்படும் அளவிற்கு பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இந்த ஊழல் வழக்கு இல்லை என்று நீதிமன்றம் கருதியது.

அரசியல் இலாபங்களுக்காகவும் இந்த கண்காணிப்பு பயன்படுகிறது. 2015ஆம் ஆண்டு ஹேக்கிங் டீம் (கண்காணிப்பு நடத்தும் ஓர் இத்தாலிய நிறுவனம்) கசியவிட்ட சில மின்னஞ்சல்கள் ஆந்திர பிரதேச காவல்துறையினர் ஊடுருவல் கருவிகளை வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர் என்று காண்பித்தது. ஆந்திர முதல்வரின் தொலைபேசியை அவரது அரசியல் எதிரியான அப்போதைய தெலுங்கானா முதல்வர், ஒட்டுக்கேட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங்கிடம் புகார் தெரிவித்த பின்னணியில் இது கண்டறியப்பட்டது. என்எஸ்ஓ குழும தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளை சட்டீஸ்கர் மாநில காவல்துறை உறுப்பினர்கள் சந்தித்தார்கள் என்றும் ஒரு சம்பவம் உள்ளது. இந்த அத்துமீறல் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து அரசு பல்வேறு தகவல்களைக் கேட்டபோதும், தங்களது சொந்த முகமைகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்று கேட்க அரசு தவறிவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட ஒவ்வொரு சட்டத்தின் கீழும் எந்தவிதமான விலக்குகளும் இல்லாதபோது, தேசிய பாதுகாப்பு முகமைகள் நமது ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் பொறுப்பாக மாறிவிட்டன. பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கு பதிலாக ஆள்பவரை பாதுகாப்பதாக அவர்கள் நோக்கம் மாறியதுபோல் தெரிகிறது. இந்தியாவில் கண்காணிப்பு சீர்திருத்தங்கள் ஏற்படுவதற்கான அவசரத் தேவை உள்ளது. 2019ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமுன்வடிவு, வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. இது மிகவும் கவனமாக சோதிக்கப்பட்டு அறிக்கை அளிக்கப்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் வெளிப்படைத்தன்மையை கோர வேண்டும். தற்போதைய கண்காணிப்பு நடைமுறைகளை சோதித்து, அரசமைப்புச் சட்ட நடைமுறைகளுக்கு எதிராக ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பம் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு பெகாசஸ் விவகாரத்தில் தனது புலனாய்வை விரைவுபடுத்தி ஒட்டுமொத்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய தருணங்கள்தான் நமது ஜனநாயக தன்மையை சோதிக்கின்றன. நமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட இந்திய நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

 

Updated On : 5th Dec, 2019
Back to Top