ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மாணவர் மரணங்கள் தேசத்திற்கு நஷ்டம்

சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இளம் மாணவர்களின் தற்கொலையானது தேசியத் தோல்வியைக் காண்பிக்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தங்களது வாழ்கையை தாங்களே மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட மாணவர்களின் கூக்குரல் வளர்ந்துகொண்டே உள்ளது போல்தான் தெரிகிறது. விவரங்களின்படி தற்கொலைக்கான தனித்தனி காரணங்கள் வேறாக இருக்கலாம், ஆனால் இரண்டு முக்கிய விஷயங்கள் ஒரே மாதிரிதான் உள்ளன. முதலாவதாக, இவர்களுள் பெரும்பாலானவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்த ஒடுக்கப்பட்ட சாதி அல்லது சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள். இரண்டாவதாக, இவர்களது புகார்களையும் இன்னல்களையும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் புறக்கணித்துள்ளனர். இவர்களுள் சிலர் தற்கொலைகளுக்குப் பிறகு பிரபலமான பெயர்களாக மாறியுள்ளனர்: அனில் மீனா, ரோஹித் வெமூலா, செந்தில் குமார், பயல் டாட்வி, நஜீப் அகமது, தற்போது நவம்பர் மாதம் 9ஆம்தேதி இறந்த ஃபாத்திமா லத்தீஃப் ஆகியோரைக் குறிப்பிடலாம். ஆனால், இந்தப் பட்டியலில் உள்ளோரின் எண்ணிக்கை ஆயிரங்களில் சென்றுகொண்டுள்ளது. அரசின் அறிக்கைகளின்படி, 2014க்கும் 2016க்கும் இடையில் நம் நாட்டில் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் துயரத்தில் விட்டுச் சென்றுள்ளனர். தேர்வு முடிவுகளில் உயர் சதவீதங்களை பெறுவதற்குக் கடும்போட்டி நிலவும். இந்த போட்டிக்கான மனிதத்தன்மையற்ற அழுத்தங்களைப் போராடி வெற்றி கொண்டவர்களே இவர்களுள் பலர். ஒரு தேசமாக, இவர்களின் புகார்களையும் அழுகைகளையும் சந்தித்து அவற்றுக்கு உதவுவதற்கான வழிமுறைகளை நாம் இன்னும் அமைக்கவில்லை என்பது அவமானகரமானது.

இத்தகைய தேவையற்ற உயிரிழப்புகளை தடுக்க அர்த்தமுள்ள வழியில் செயல்படாத முக்கியமான நிறுவனங்களில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், அது ஊடகங்கள் என்று கூற வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மூன்று தலித் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதைக் கூறலாம். அதிகபட்ச கல்விக்கட்டணம், மோசமான வாழ்நிலை, படிக்கும் வசதிகள் அளிக்காது துன்புறுத்தப்படுவதாக இவர்கள் மூன்று பேரும் கல்லூரித் தலைவருக்கு மட்டுமல்ல, மாநில நிர்வாகத்தினருக்கும் நிறைய புகார்கள் எழுதியிருந்தார்கள். கடைசியில், தற்கொலை செய்வதன் மூலம்தான் தங்களது மற்றும் தங்கள் சக மாணவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். இவர்களது தற்கொலைக் குறிப்புக்களை மிகவும் விரிவாக ஊடகங்கள் பிரசுரித்தபோதும், அவர்கள் மரணத்தில் கூட ஏமாற்றப்படுகிறார்கள் என்பது நகைமுரண்.

சில வாரங்கள் மற்றும் சில நாட்கள், இந்த குறிப்புக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன, விமர்சிக்கப்படுகின்றன. அதன் பிறகு எல்லோரும் சராசரி வாழ்க்கைக்குத் திரும்புகின்றனர். காவல்துறை புலன் விசாரணையை தீவிரமாக பின்தொடர்வதற்கோ அல்லது இந்த தற்கொலைகளுக்கான காரணங்களை ஆராய்வதற்கோ, அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை தொடர்ச்சியாக வலியுறுத்துவதற்கோ எந்த முயற்சிகளும் சொந்தமாக எடுக்கப்படுவது இல்லை, (சில கௌரவமான விலக்குகள் தவிர). பல்வேறு வழக்குகளில், முதலில் அளிக்கப்பட்ட உணர்வுபூர்வமான அறிக்கையை தவிர அந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்த எந்தத் தகவலும் இல்லை.

ஆனால், ஊடகங்களை விட அதிக பொறுப்பு உடையவர்கள் இந்த உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர். தங்கள் நிறுவனங்களின் தேசிய அளவிலான, சர்வதேச அளவிலான தர நிர்ணயங்கள் குறித்து பலர் பெருமைப்படும் அதே வேளையில், தங்கள் சொந்த மாணவர்களின் துயரங்களை அப்படியே புறக்கணிக்கிறார்கள். பல்வேறு தலித், பழங்குடியின மாணவர்கள், சிறுபான்மையின மாணவர்கள் இந்த நிறுவனங்களுக்குள் பல்வேறு சமூக பொருளாதார விலை கொடுத்து நுழைகிறார்கள். பழக்கப்படாத சூழ்நிலையோடு ஒத்துப்போக அவர்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது. பெரும்பாலும் அவர்கள் ஆங்கில வழியில்லாத கல்வி நிறுவனங்களில் கல்வி பெற்றிருப்பார்கள். சக மாணவர்களுடன் உரையாடும் வழக்கங்களிலும், அங்கு கற்றுக்கொடுக்கப்படும் ஆங்கில வழி பாடத்தைத் தொடர்வதையும் கடினமாக உணர்வார்கள். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் கட்டமைப்புகள் திறமையாக செயல்படுகின்றனவா? அவை கட்டமைப்பு ரீதியாக இருந்தாலும், உணர்வுபூர்வமாக இருக்கின்றனவா? உயர் மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பிற உயர் நிறுவனங்களில் தலித்துகள், பழங்குடியினர், பிற ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து பல்வேறு அறிக்கைகள் உள்ளன. இந்த அறிக்கைகள் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அவற்றின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப் பட்டதற்கான நிர்வாக அமைப்பு எது என்பவை புரியாத புதிராகவே உள்ளன. வெளிப்புற மற்றும் உட்புற மதிப்பீடு, தேர்வு முறை, அணுகுமுறை, இந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் தேர்தல் குறித்த பேராசிரியர்களின் நடவடிக்கை ஆகியவை குறித்த அளவீடுகள் இவற்றில் உள்ளடக்கம். விடுதிகள், உணவகங்கள், வகுப்பறைகளில் இந்த மாணவர்கள் சந்திக்கும் ஒட்டுமொத்த பாரபட்சத்தினால் இந்த மாணவர்களுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது என்று திரும்ப திரும்ப சொல்லவேண்டிய தேவையில்லை. ஆனால் இந்த விவகாரங்களின் மீது அநேகமாக எவ்விதமான கவனமும் செலுத்தப்படுவதேயில்லை.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி) மனிதவளத் துறையில் கல்வி கற்ற மாணவி ஃபாத்திமா லத்தீஃப்பின் பெற்றோர்கள், அவர்களது மகளை சில பேராசிரியர்கள் துன்புறுத்தியுள்ளார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர். பேராசிரியர்களின் துன்புறுத்தலாலேயே அந்த மாணவி இந்தக் கடும் முடிவுக்கு ஆளாகியுள்ளார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த நிறுவனத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனங்களில் கலந்தாய்வு மையம் உள்ளது, ஓர் ஆரோக்கிய மையம், மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், தேவைப்படும் மாணவர்களுக்கு உதவும் அமைப்பு ஆகியன உள்ளன என்று இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆலோசனை மையங்கள் மற்றும் சுகாதார மையங்கள் அமைக்கப்படவேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தகைய வழக்கமான நடவடிக்கைகளையும் தாண்டி செயல்பட வேண்டிய அவசரத் தேவை உள்ளது. வெறும் இடஒதுக்கீட்டு அமைப்போ அல்லது மனநல ஆலோசகர்களைப் பணிக்கமர்த்துவது மட்டுமோ போதாது. மிகவும் உயர்தரமான கல்வி அளித்து, அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்த்து, கல்வி ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டிய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட பின்னணியிலிருந்து வரும் மாணவர்களைத் தொடர்ச்சியாக தோல்வியடைச் செய்வதற்கான காரணங்கள் என்ன? தங்கள் சமூகத்தினருக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய இந்த இளம் மாணவர்கள், பல்வேறு போராட்டங்களையும் போட்டிகளையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்பும், தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதே சிறந்தது என்று ஏன் நினைக்கிறார்கள்?

இத்தகைய கூருணர்வுமிக்க விவகாரங்களை விவாதிக்க வேண்டிய பொது மேடை இதனை தரம் அல்லது இடஒதுக்கீடு சார்ந்த விவகாரமாக மாற்றுகின்றது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலைப் பிரிவினரையும், சிறுபான்மை இனத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அப்போதைய தீர்வைத்தான் சொல்கின்றனவே தவிர, நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து எந்த பதிலும் அளிப்பதில்லை. பல்வேறு விவாதங்களில் அவர்கள் முன்னணி இடத்தில் இல்லை. 

அறிவுக்கூர்மைமிக்க இளம் மாணவர்களை இழப்பது தேசத்திற்கான நஷ்டம். இந்த இழப்புகள்  முக்கியமானவைகளாகக் கருதப்பட்டு, இவற்றைத் தடுப்பதற்காக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது எப்போது?

Back to Top