ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தனியார்மயமாக்கலின் ஆபத்தில் பெஸ்ட்

மும்பையில் நடந்த பெஸ்ட் பேருந்து வேலைநிறுத்தமும், அதன் பிரச்னைகளும் இந்தியாவின் நகர்ப்புறங்களில் அரசாங்கப் போக்குவரத்தின் போதாமைகளை காட்டுகின்றன.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

மும்பை மாநகரத்தின் வரலாற்று அடையாளங்களுள் ஒன்றான பிர்கன்மும்பை மின் விநியோகம் மற்றும் போக்குவரத்துப் (BEST-பெஸ்ட்) பேருந்துகள் மும்பை மாநகரத்தின் சாலைகளில் 2019 ஜனவரி 8 முதல் 17 வரை தென்படவில்லை. பல லட்சக்கணக்கான மக்களின் போக்குவரத்திற்கு இந்தப் பேருந்துகள் முதுகெலும்பு போன்றவை. அந்த மக்கள் இந்த வேலைநிறுத்தத்தின்போது பெரும் அவதிக்கு ஆளாயினர். குறிப்பாக, வேறு விதமான பொதுப் போக்குவரத்து அல்லது தனியார் போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் வசித்தவர்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாயினர், மாணவர்களால் தேர்வு எழுதக்கூட போக முடியவில்லை. ஆனால் பிரிகன்மும்பை மின் விநியோகம் மற்றும் போகுவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமையிலான இந்த வேலைநிறுத்தத்தில் இரண்டு அம்சங்கள் துலக்கமாக வெளிப்பட்டன. ஒன்று, சமீப காலங்களில் நடந்த இத்தகைய வேலைநிறுத்தங்களில் இதுவே பல நாட்களுக்கு நீடித்த ஒன்று என்றாலும் பயணிகளின், பொதுமக்களின் அனுதாபம் தொழிலாளர்கள் பக்கமிருந்தது. சிவ சேனா கட்சியின் தொழிற்சங்கங்கள் பிளவு வேலைகளில் ஈடுபட்டபோதிலும் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைமையில் தொழிலாளர்கள் உறுதியாக இருந்தார்கள். பொதுமக்களின் அனுதாபம் வேலைநிறுத்தத்திற்கு கிடைத்ததற்குக் காரணம் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் இருந்த நியாயம் மட்டுமல்ல அவர்கள் பொதுவாகவே அரசாங்க போக்குவரத்தின் நலனுக்காகவும் போராடியதுதான். இரண்டு, பாம்பே உயர் நீதிமன்றத்தின் தலையீட்டின் காரணமாக மீண்டும் பேருந்துகள் ஓடத் தொடங்கினாலும், விரவில் பெஸ்ட் தனியார் கைக்குப் போகும் அல்லது அது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு பிற தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் லாபமடையும்படி பார்த்துக்கொள்ளப்படுமென்ற கருத்தே பொதுவாக நிலவுகிறது. இரண்டுமே அரசாங்கப் போக்குவரத்து நிறுவனத்தின் அல்லது மும்பைவாசிகளின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

மும்பை மாநகரம், அதன் புறநகர்ப்ப்குதிகள், மீரா-பையாண்டர், நவி மும்பை, தானே ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவையை அளித்துவருகின்றன பெஸ்ட் பேருந்துகள். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகவே பெஸ்ட் அதன் சாவின் விளிம்பில் இருந்துவருகிறது. மோசமான நகர திட்டமிடல், அரசாங்க சேவைகளை புறக்கணித்து தனியார் சேவைகளுக்கு சலுகைகள் அளிப்பது, சாதாரண குடிமக்களின் தேவைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாதது ஆகியவற்றின் காரணமாக மேலும் ஒரு நிறுவனம் பலியாகிறது. இதுவொரு அகில இந்திய புலப்பாடு. படுவேகமான, திட்டமிடப்படாத நகரமயமாக்கம் மற்றும் மோசமான ஆட்சி நிர்வாகத்தின் விளைவாகும். பெஸ்ட் விஷயத்தைப் பொறுத்தவரை நகரத்தின் மையமான இடங்களில் அவற்றின் பணிமனைகள் இருக்கும் இடங்களை விற்பது, லாபமில்லை என்று கூறி பேருந்து வழித்தடங்களை ரத்து செய்வது, பயணக் கட்டனத்தை உயர்த்துவது, பேருந்துகள் மோசமாக பராமரிக்கப்படுவது, பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது ஆகிய விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்தவையே.

துண்டுதுண்டாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடக்கும் நகர திட்டமிடலின் கைதியாக அரசாங்க போக்குவரத்து இருப்பதற்கு சரியான உதாரணமாக இருக்கிறது பெஸ்ட். லாபமில்லாத தடங்களை நிறுத்திவிடுவது, உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் வளர்ச்சிக்கான விஷயங்களில் முதலீடு செய்வது ஆகியவற்றை நிறுத்திவிடுவது என்பதில் அதிகாரிகள் காட்டும் அழுத்தம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வளரும் நாடுகளில் அரசாங்கத்தின் மானியங்கள் இல்லாமல் அரசாங்கப் போக்குவரத்து நிறுவனங்கள் செயல்பட முடியாது என்பது அனைவரும் அறிந்தவிஷயம்தான். ஒரு துறையில் கிடைக்கும் லாபத்தை இன்னொரு துறையில் ஏற்படும் ‘’இழப்புகளுக்கான’’ மான்யமான அளிப்பதன் மூலம் இந்த நிறுவனத்தை நடத்துவது பற்றி பெஸ்ட் அதிகாரிகள் சிந்திக்கவேண்டும். இதன் பட்ஜெட் பிரிகன்மும்பை முனிசிபல் கார்ப்போரேஷனின் (பிஎம்சி) பட்ஜெட்டுடன் சேர்க்கப்படவேண்டும் என்று பெஸ்ட் தொழிலாளர்கள் கோரிவருகின்றனர். இந்த முக்கியமான கோரிக்கையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாறாக, பிற மாநகரங்களில் நடப்பதைப்போலவே சாலை போக்குவரத்து திட்டமிடலானது கார்களை மையப்படுத்தியே இருக்கின்றன. பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவருவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். இது மோசமான திட்டமிடலின் விளைவே. உலகில் எங்காவது நகரங்களில் தினசரி போக்குவரத்திற்கு பெரும்பாலான மக்கள் விலைமிகுந்த தனியார் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள் என்று கற்பனை செய்வது கேலிக்குரியது. சாலை நெரிசல், நடைபாதை வசதியின்மையின் காரணமாக நடக்கிறவர்கள் சாலைகளில் நடப்பது, எந்த சிந்தனையுமின்றி மோட்டார் வாகன தொழிற்சாலைகளுக்கு சலுகைகள் தருவது என எல்லாம் சேர்ந்து பெஸ்ட் சேவையானது நேரம் பிடிப்பது, தினசரி போக்குவரத்திற்கு உதவாதது என்று தோன்றுபடி செய்துவிட்டது. இதன் துணை விளைவாக மும்பையில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே இருசக்கர மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்படுவது பெரிதும் அதிகரித்துவிட்து. இது சாலை நெரிசலை மேலும் மோசமாக்கிவிட்டது.  தனியார் மோட்டார் வாகன போக்குவரத்தை விட, திறம்பட நடத்தப்படும் அரசாங்கப் போக்குவரத்து எந்தக் கேள்விக்கும் இடமின்றி மேலானது.

குறுக்கு-பயன்பாட்டு மாதிரியை பெஸ்ட் தொடரக்கூடாது என 2016ல் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டநிலையில் நிதிப் பற்றாக்குறையின் காரணமாக அதன் சேவைகளும், முதலீடுகளும் குறைந்தன. பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்தது மட்டுமல்லாமல் ஓய்விற்குப் பிறகு கிடைக்கவேண்டிய பல பலன்கள் பெரும்பாலான பணியாளர்களுக்கு இல்லாதுபோய்விட்டது. அப்போதிலிருந்தே பேருந்துகளை வேறு ஏதாவது நிறுவனத்திடம் ஒப்பந்தத்திற்குவிடுவதை ஆதரித்துவருகிறது பிஎம்சி. சமீபத்திய வேலைநிறுத்தத்தின்போதும் பகுதியளவு தனியார்மயமாக்கல்தான் இந்த நிறுவனத்தை காப்பாற்றுமென பிஎம்சி அதிகாரிகள் வலியுறுத்தினர். அரசாங்க சாலைப் போக்குவரத்து நிறுவனங்களே இல்லாத பல மாநிலங்கள் காட்டுவதைப்போல் தனியார்மயமாக்கல் உண்மையான தீர்வல்ல. தனியார் பேருந்து தடங்களானது லாபத்தின் அடிப்படையில் இயங்குவது, பயணிகளின் தேவைக்காக அல்ல. தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு மிகக் குறைவான ஊதியத்தை வழங்குவதுடன், மோசமாக பராமரிக்கப்படும் தங்களது பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாது அளவுக்கு மீறி ஆட்களை நிரப்பிச்செல்கின்றன.

மும்பை வேலைநிறுத்தமும், பெஸ்ட் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொள்கை மாற்றத்தையும், முன்னுரிமைகளில் மாற்றத்தையும் வேண்டிநிற்கின்றன. மிகப் பரவலான அரசாங்கப் போக்குவரத்து இல்லாமல் எந்த இந்திய நகரமும் அதன் தேவைக்கு ஏற்ப செயல்படமுடியாது. எல்லாவற்றையும்விட முக்கியமாக அரசாங்கமானது மோட்டார் வாகன தொழிற்சாலை மற்றும் கார் மையமான தீர்வுகளில் கவனத்தை குவிப்பதை நிறுத்தவேண்டும். ஆனால் மிகப் பெரும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் மாநில மற்றும் உள்ளாட்சி அளவுகளில் அரசாங்கப் போக்குவரத்தை விரிவுபடுத்த மற்றும் நவீனப்படுத்த கிடைக்கக்கூடிய நிதிகளின் அளவுதான். இந்த அம்சங்கள் இந்திய நகரங்களில் காற்றின் தரத்தையும், போக்குவரத்தின் திறனையும் நிர்ணயிப்பவையாக இருக்கின்றன.

இது சாதாரண பணியல்ல. இதை சாதிக்க குடிமக்களின் அமைப்புகளும், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஒன்றுபடுவதுடன் அவை வலுவான அரசியல் உறுதியில் வேர்கொண்டிருக்கவேண்டும். இந்த நாட்டில் நகரமயமாக்கல் நடக்கும் வேகத்தில், பெஸ்டினுடைய உதாரணமானது பிற அனைத்து நகரங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த வேலைநிறுத்தமானது, நகரங்களின் மற்றும் நகர்ப்புற வாழ்க்கையின் குணத்தை வடிவமைப்பதில் தொழிலாளர்களின் கூட்டான செயல்பாடு ஆற்றக்கூடிய முக்கியமான பங்கை எடுத்துக்காட்டுகிறது.

Back to Top