ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தேர்தல் முடிவுகளும் பங்குச் சந்தையின் எழுச்சியும்

சந்தைகளானது நிலைத்ததன்மையை மட்டுமல்ல வலுவான அதிகார பீடத்தையும் சேர்த்தே விரும்புகின்றன.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானதற்கு அடுத்த நாளான மே 20 அன்று முதல் முறையாக சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொட்டது. உலகளாவிய பொருளாதார, வர்த்தக கணிப்புகள் எதிர்மறையாக இருந்த சூழலில் இந்த ஏற்றம் பிரம்மாண்டமானதுதான். ஆனால், ஜூன் 6ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை குறைத்த பிறகு சந்தையில் 400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.

 இந்த வீழ்ச்சி இருந்தபோதிலும் முன்னெப்போதும் இருந்திராத இந்த ஏற்றமானது தேசிய ஜனநாயக கூட்டணியின் அல்லது ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2ன் கொள்கைப் பிரகடனங்களால் பங்குச் சந்தையில் சாதிக்கப்படாத நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் சாதித்திருக்கின்றன. ஏன்? பங்குச் சந்தை செயல்பாடுகள் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது: எந்தெந்த நிறுவனங்களின் பங்குகள் விற்றல்-வாங்கல் வர்த்தகத்தில் இருக்கின்றனவோ அவற்றின் அவற்றின் நீண்ட கால அடிப்படைகள் (அதாவது ஒரு நிறுவனம் குறித்த அடிப்படையான விஷயங்கள்) மற்றும் பங்குச் சந்தை அமைப்பில் ஏற்படும் எதிர்பாரா உடனடி அதிர்ச்சிகள். கீன்ஸின் வார்த்தைகளில் சொன்னால், பங்குச் சந்தையின் ஏற்றத்தில் எது யூக அடிப்படையிலானது (குறுகிய கால லாபம்) மற்றும் எது ஒரு நிறுவனத்தின் அடிப்படைகள் என்று கருதப்படுவதன் அடிப்படைகளிலானது என்று பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். முதலில் சொல்லப்பட்டது முக்கியமான காரணமெனில் சந்தைகள் அதீதமாக மதிப்பிடப்பட்டிருக்குன்றன, திருத்தங்கள் தேவை என்று பொருள். இரண்டாவதாக சொல்லப்பட்டதுதான் காரணமெனில் இன்றைய விலை-வருவாய்கள் (பிரைஸ்-எர்னிங்ஸ்) வீதம் அதிகம் இருந்தாலும் அது எதிர்காலப் பொருளாதரம் குறித்த மேலான எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலானது என்று பொருள்.  நெல்லை (நிறுவனத்தை) பதரிலிருந்து (யூக வணிகத்திலிருந்து) பிரிப்பது கடினம். ஏனெனில் இன்று பதராகத் தோன்றுவது (உயர் விலை-வருவாய் வீதத்துடன் அதிகமாக மதிப்பிடப்படும் சந்தை) அப்படியில்லாதிருக்கலாம். அது ஈட்டக் கூடிய வருவாய்களின் எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையிலானதாக இருக்கலாம். இந்த எதிர்பார்ப்பு உண்மையாகவும் கூடும். ஆனால் கடந்த சில வாரங்களில் இந்த உணர்வுகளைத் தூண்டி விட்டது எது?

ஒன்று, வர்த்தகத்தில் ஏற்பட்ட இந்த குறுகிய கால, ஒரு நாள் ஏற்றத்திற்கான காரணம் நரேந்திர மோடி அரசாங்கமே மீண்டும் வருமென்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியதே. இரண்டு, முதல் காரணத்துடன் தொடர்புடையது என்றாலும், முதலீட்டாளர்களின் நீண்ட கால பார்வையில் பெரும்பான்மை அரசாங்கம் வழங்கும் அரசியல் நிலைத்தன்மை நல்ல வர்த்தகச் சூழலை உருவாக்கும் வல்லமை கொண்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு மட்டும் போதாது. அதிலும் குறிப்பாக, தனது முதல் ஆட்சியின் போது பொருளாதாரத் துறையில் எதையும் சாதிக்க முடியாத நிலையில். திறனற்ற அரசாங்கம் மீண்டும் வருவதென்பது முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்ய நிச்சயமாக நல்லதல்ல. ஆனால் ஏன் அவர்கள் இந்த அரசாங்கம் வர வேண்டுமென விரும்புகிறார்கள்? மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருக்கும் பிரதமர் மோடியில் உறைந்திருக்கும் “வலிமையான” தலைவர் உறுதியான முடிவுகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தருவதே இதற்குக் காரணம். அரசியல்ரீதியாக கடினமான ஆனால் சந்தைக்கு சாதகமான பொருளாதார சீர்திருத்தங்களுக்காக மோடியை கார்ப்போரேட் நிறுவனங்கள் ஆதரிக்கின்றன. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது அல்லது தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தங்கள் போன்ற விஷயங்களை மோடி தனது இரண்டாது ஆட்சியில்  செய்வார் என கார்ப்போரேட்டுகள் எதிர்பார்க்கின்றன. பணமதிப்புநீக்கம் போன்ற மக்கள் விருப்பத்திற்கெதிரான விஷயங்களை கடந்த ஆட்சியின் போது அமல்படுத்திய மோடியிடம் கார்ப்போரேட்டுகள் நம்பிக்கை கொண்டிருப்பது எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்றுதான்.

மூன்று, இந்தியப் பொருளாதாரத்தின் உடனடியான வெற்றிகரமாக செயல்பாடு பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இந்தியப் பொருளாதாரம் பற்றி கூறியிருக்கும் யூகமும் ஒரு முக்கிய காரணமாகும். உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களுள் ஒன்று இந்தியா என்று அது கூறியிருக்கிறது. கடந்த காலாண்டில் பொருளாதார நிலை சிறப்பாக இல்லை என்ற நிலையில் இது ஆச்சர்யத்திற்குரியது. அவ்வளவாக சிறப்பாக இல்லாத எதிர்காலத்தில் அல்லாமல் தங்கள் நம்பிக்கையை முதலீட்டாளர்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தின் மீது வைத்திருக்கிறார்கள். பெட்ரோல் விலை குறைவின் காரணமாக பண விநியோகத்தை தளர்த்தியிருப்பது இந்த உற்சாகத்திற்கான காரணங்களுள் ஒன்று. சாதாரணமான சூழலில் பங்கு பத்திரத்தில் குறைவான லாபம் என்பது பங்குகளை வாங்குவதை மேலும் லாபகரமாக்குகிறது. குறைந்த வட்டி விகிதமானது கார்ப்போரேட் மற்றும் குடும்ப முதலீட்டிற்கு (ஹவுஸ்ஹோல்ட் இன்வெஸ்மெண்ட்) தூண்டலை அளிக்கும், அது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கி அனுப்பும் சமிக்ஞைகள் கலவையாக இருக்கின்றன. வட்டி விகிதத்தை குறைத்த போதே எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி விகிதத்தையும் குறைத்தே திருத்தியமைத்திருக்கிறது. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பண நெருக்கடியை தீர்ப்பதற்கு எதுவும் சொல்லப்படவில்லை.

நான்கு, 2019ல் இது வரை வெளிநாட்டு தொகுப்பு முதலீடு வருகை பெரிய அளவிற்கு இருந்திருக்கிறது. இதற்கான காரணங்களுள் ஒன்று அந்த முதலீடுகள் எங்கிருந்து வருகின்றன, அவை ஏன் அங்கிருந்து வெளியேறுகின்றன என்பதில் இருக்கிறது. இந்த விஷயத்தில் இது சீனா-அமெரிக்கா வர்த்தப் போர், அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி பெறுவதில் உள்ள சுணக்கம், அமெரிக்காவில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டு அதன் விளைவாக அமெரிக்கப் பத்திரங்களில் கிடைக்கும் லாபம் குறையும் என்ற எதிர்பார்ப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம். முதலீடுகளை உள்ளே இழுக்கும் காரணிகள்தான் உள்ளூர் முதலீட்டாளர்களை உந்துகிறது.

பங்குச் சந்தையில் உள்ள வெற்றிகரமான முதலீட்டாளர்களின் நிலைபாடு சரியோ, தவறோ ஒரு விஷயம் தெளிவாக இருக்கிறது: குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிற்குப் பின் நடந்ததைப் போல், பெரும்பாலும் பதரைப் போன்றவை. ஆனால் மற்றபடி இது மிகையாக மதிப்பிடப்பட்ட பங்குச் சந்தை எனில் பொருளாதாரத்திற்கு ஆபத்தாக முடியும், அதிலும் குறிப்பாக உலகச் சூழல் நிச்சயமின்மையுடன் இருக்கும் நிலையில். மிகை மதிப்பீடு ஆபத்துகளை குறைக்க குறுகிய கால மூலதன வருவாய் வரி விதிக்க வேண்டுமென கீன்ஸியர்கள் வாதிடுவர். அதே நேரத்தில், பெரிய அளவிலான பிளக்க முடியாத மூலதனத்தை பிளக்கும் வேலையைச் செய்வதால் அரசின் கொள்கைகள் பங்குச் சந்தையையும் ஊக்கங்கெடுக்கக் கூடாது. செயலூக்கம் கொண்ட நிதிக் கொள்கையின் மூலம் பொருளாதாரத்தின் கடிவாளத்தை அரசாங்கம் தனது கைகளில் வைத்திருக்க வேண்டுமே தவிர கார்ப்போரேட் முதலீடுகளை மறைமுகமாக ஊக்குவிப்பது அல்லது வட்டி விகிதத்தை மாற்றுவதன் மூலம் குடும்ப முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமாக இருக்கக் கூடாது. துரதிருஷ்டவசமாக இந்த அரசாங்கம் மோசமான பொருளாதாரச் சூழலில் கூட நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் பெரும் நம்பிக்கையை வைத்திருக்கிறது. இந்தச் சட்டமோ கொள்கைக்கான இடத்தை குறுக்குவதுடன் பங்குச் சந்தை இயக்கங்களுக்கு ஏற்ப இயங்கும் கீழ்படிந்த நிலைக்கு பொருளாதாரத்தை கொண்டுவருகிறது அல்லது கார்ப்போரேட்டுகளின் முடிவுகளுக்கு பொருளாதாரத்தை கீழ்படுத்துகிறது, பொதுவாக இது எல்லா நேரங்களிலும் பொருளாதாரத்தின் வளமைக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

Back to Top