”தீங்கற்ற” பணவீக்கக் குமிழ்
பணவீக்க மேலாண்மையானது முழுமையான வளர்ச்சியை இலக்காக கொண்டிருக்க வேண்டும்.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
“பணவீக்கம்” என்ற பிரச்னை தேர்தலில் ஒரு விவாதமாக ஆகாத முதல் தேர்தல் அநேகமாக 2019 பொதுத் தேர்தல்தான். இதில் தவறில்லை, ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பணவீக்கமானது, குறிப்பாக தலைப்புவரி (ஹெட்லைன்) பணவீக்க விகிதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 2014 முதல் 2018 ஏப்ரல் வரை, ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம், நுகர்வோர் விலை குறியீட்டெண் மாற்றத்தின் விகிதத்திற்கு ஏற்ப மதிப்பிடுகையில், 6.65%லிருந்து 2.42% ஆக குறைந்திருக்கிறது. ஆனால், இந்த மதிப்பீடுகளின் எண் மதிப்பிற்கு நம்பகத்தன்மை வழங்குவது எதுவெனில் பணவீக்கத்தில் ”அனுமதிக்கப்பட்ட” அளவு 2%-6% என்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருப்பதுதான்.
பணவீக்கத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான உறவு குறித்த பேரியல்பொருளாதார (கொள்கை) சொல்லாடல் “வாயிற்படி அளவிலான” பணவீக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறது. இந்த பணவீக்கமானது வாயிற்படி எல்லையை மீறுவது பொருளாதார வளர்ச்சிக்கு கேடு என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சியின் மீதான குறைந்த பணவீக்கத்தின் தாக்கம் கலவையானதாக இருப்பதை அனுபவப்பூர்வ ஆதாரங்கள் காட்டுகின்றன. இந்த தாக்கம் நேர்மறையாக இருக்கிறது அல்லது புறக்கணிக்கத்தக்கதாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கும் பணவீக்க அளவுடன் இந்த ஆதாரங்களையும் சேர்த்துப் பார்க்கையில் நுகர்வோர் விலை குறியீட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் இப்போது உயர்ந்திருப்பது, ஐந்து மாதங்களில் அதிகபட்ச அளவான 2.92%ஐ 2019 ஏப்ரலில் எட்டியது, ரிசர்வ் வங்கியின் மொழியில் சொன்னால் தீங்கற்ற ஒன்றே. எந்த அளவிற்கு என்றால் ரிசர்வ் வங்கி தனது கொள்கை விகிதத்தை மூன்று மாதங்களுக்குள் 6%லிருந்து 5.75%ஆக குறைக்க முடியும். பரந்துபட்ட சமூக-பொருளாதார நோக்கங்களின் மீது இத்தகைய எச்சரிக்கையான பொருளாதார வளர்ச்சித் உத்திகளின் விளவுகள் எப்படியிருந்தபோதிலும் தனியார் முதலீட்டையும் நுகர்வு செலவினத்தையும் தூண்டுவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இப்போதிருக்கும் குறைவான அளவாக 5.8%லிருந்து 2019-20 இலக்கான 7%க்கு கொண்டுவருவதே இதன் நோக்கம்.
தான் வாங்கும் பொருள் தான் கொடுத்த பணத்திற்கு அதிகபட்ச அளவு பலனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிக்குண்டிருக்கும் தனிநபர் பற்றிய கருத்தாக்கத்தின் அடிப்படையில் பொருளாதார சாதனையின் ஒரே அளவீடாக ஜிடிபி உருவாகியிருப்பதை கடந்த ஐம்பது ஆண்டுகளாக பொருளாதார இலக்கியம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அனுதாபம், கூடிப் பழகும் இயல்பு, சமூகக் கடப்பாடு, கூட்டுச் செயல்பாடுகள் போன்ற மனித நடத்தைகளுக்கு இது முக்கியத்துவம் தருவதில்லை என்பதையும் பொருளாதார இலக்கியம் சுட்டிக்காட்டுகிறது. ஜிடிபியை தூண்டக்கூடிய பணவீக்கத்தை இலக்கு வைப்பதை இதே போன்றதொரு கருத்தாக்கத்தின் அடிப்படையில் வைக்கப்பட முடியும். உதாரணமாக, நுகர் பொருட்களின் (உணவு) விலைகள் விண்ணைத் தொட்ட பிரச்னையை 2014 பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) முக்கியமான பிரச்னையாக்கியது. நுகர் பொருட்களை நுகர்வதில் பெரும்பான்மையானோர் நடுத்தர வர்க்கம். இதன் ஆதரவு பாஜவிற்கு கிடைத்தது அதன் வெற்றிக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, நுகர் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதில், அது உற்பத்தியாளர்களின் விலைகளை குறைக்கும் என்றாலும், பாஜக அதிக அக்கறை காட்டியது. இதன் விளைவை விவசாயத் துறையில் பார்க்கலாம். நடுத்தர வர்க்கமோ விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளை பொது வெளியில் எழுப்புவதில் எந்த அக்கறையும், தோழமையும் காட்டவில்லை.
இத்தகைய பின்னணியில் “தீங்கற்ற” பணவீக்கம் என்ற கருத்தாக்கம் கடும் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடியது. ஏனெனில் நுகர்வோர் விலை குறியீட்டெண், மொத்த விலை குறியீட்டெண் போன்ற பல்வேறு வழிகளில் அளவிடப்படும் பணவீக்கமும் பல்வேறு சேவைகள் மற்றும் பண்டங்களின் ஒப்பீட்டளவிலான விலை நடத்தையும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவினர்களுக்கு வெவ்வேறு மாதிரியாக இருக்கிறது. இவ்வாறாக பணவீக்க விகித இலக்கிற்கான சட்ட அதிகாரமானது பிரித்தாளும்/அந்நியப்படுத்தும் அரசிலுக்கு நன்கு பொருந்திப்போகிறது. இது வாக்காளர்களின் அறிவை குழப்பிவிடுகிறது, குறிப்பாக கருத்தை உருவாக்குபவர்கள் அதை “தீங்கற்ற” ஒன்றாக வாக்காளர்களுக்கு காட்டுகிறார்கள்.
கருத்தாக்கரீதியாக பணவீக்க விஷயத்தில் நுகர்வோர் விலை குறியீட்டெண்ணானது நிதிக் கொள்கை விஷயங்களில் மொத்த விலை குறியீட்டெண்ணை விட நல்ல சுட்டிக்காட்டியாகும் (இண்டிகேட்டர்). ஆனால் துல்லியமாகப் பார்த்தால் ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கு கருவியானது நுகர்வோர் விலை குறியீட்டெண் மீது, இந்த நுகர் பொருட்களில் உணவும், குளிர் பானங்களும் 46%, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையுயர்வும்/சரிவும் பெரும்பாலும் விநியோகப் பிரச்னைகளின் காரணமாக, உதாரணமாக உலக சந்தையில் பெட்ரோல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் மற்றும் உள்ளூர் விவசாய உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுபவை, இவற்றின் மீது ரிசர்வ் வங்கிக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. விவசாயப் பண்டங்கள் மீது ஏற்றுமதி மற்றும் கையிருப்பு கட்டுப்பாடுகள் விதிப்பது மற்றும் வரியில்லா இறக்குமதி போன்ற விநியோக மேலாண்மைக்காக அல்லது பணத்தையும், வாங்குபவரின் நம்பிக்கையையும் சந்தையில் காணாதுபோகச் செய்துவிட்ட பணமதிப்புநீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி போன்ற கொள்கைகளுக்காக ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் அரசியல் தலையீடுகள் இந்தப் பொருளாதார அம்சங்களின் முதுகில் சவாரி செய்கிறது.
நுகர்வோர் விலைகளின் கருணை என்பது அதிர்ஷ்டத்தின் பாற்பட்டது, ரிசர்வ் வங்கி அனுமதித்திருக்கும் எல்லைக்குள்ளேயே பணவீக்கம் இருந்தாலும் பொதுவாக அது முதலில் தோன்றுவதைப் போல் நுகர்வோருக்கு நல்லதல்ல. ஒன்று, அது உணவின் விலையுயர்வால் ஏற்படுகிறது என்பதால், மொத்த விலைகள் குறியீட்டெண்ணால் அளவிடப்படுகிறது, கடந்த 33 மாதங்களில் அதிகபட்சமான 7.4%ஐ தொட்ட து. முக்கியமான உணவுப்பொருட்களின் விலையுயர்வே இதற்குக் காரணம். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது பருப்புகளின் விலையுயர்வு 14%ம், தானியங்களுடையது 8.5%ம் அதிகரித்தது. இரண்டு, தென்மேற்கு பருவமழைப் பொழிவு அவ்வளவு சிறப்பாக இருக்காதென வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில் விவசாய உற்பத்தி குறையும் என்பதால் விலையுயர்வு இன்னும் அதிகரிக்கும். மூன்று, புவியரசியலில் நிலவும் நிச்சயமற்ற நிலையின் காரணமாக பெட்ரோல் விலை ஒரு பேரலுக்கு இப்போதிருக்கும் 60 என்ற நிலை குறைந்த விலையிலிருந்து அதிகரிக்கக்கூடும். இதன் விளைவாகவும் உணவுப்பொருட்களின் விலை உயரும்.
இத்தகைய விலையுயர்வுகளால் விவசாயிகள் லாபமடைவது என்பது உணவுப்பொருட்கள் சார்ந்த பொருளாதாரத்தை அரசு புத்திசாலிதனத்துடன் மேலாண்மை செய்வதில் இருக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனது மிகையான, மாய்மால உறுதிமொழிகளைத் தாண்டி இந்த அரசு ஏதாவது செய்யுமா? நடைமுறையில் ஒரு முழுமையான வளர்ச்சி மேலாண்மை அணுகுமுறையை கடைபிடிக்குமா? அல்லது ஜிடிபி வழிபாட்டை தொடந்து பின்பற்றி பணவீக்க இலக்குகளை பயன்படுத்துவதை தொடருமா?