கேட்டோவிட்ஸா பருவநிலை மாநாடு: தவறவிடப்பட்ட வாய்ப்பு
நாடுகளிடையே நியாயமான நிலைபாடு இல்லாதது பருவநிலை மாறுபாட்டிற்கான தீர்வுகள் எட்டாக்கனியாக இருக்கக் காரணமாகும்.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
மனிதர்களால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுப்பதும், இந்தியா மற்றும் பிரேசிலின் தயக்கமான நிலைபாடும் போலந்தின் கேட்டோவிட்ஸா நகரில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில் உடன்பாடு ஏற்படுவதை சாத்தியமற்றதாக்கிவிட்டன. ஆகவே, பன்னாட்டு உச்சி மாநாடுகள் சமீபத்தில் அடைந்த தோல்விகளுள் கேட்டோவிட்ஸாவும் ஒன்றாக இருக்கும் அவ்வளவே. ஆனால் இரண்டு வார சச்சரவுகளுக்குப் பிறகு கார்பன் வெளியேற்றம் குறித்த 133 பக்க விதி புத்தகத்தில் ஏறக்குறைய 200 நாடுகள் கையொப்பமிட்டன. பருவநிலை மாறுபாடு குறித்த பாரீஸ் உடன்பாட்டை அமலாக்குவதற்கென, அதாவது உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் செல்வதை தடுக்க வடிவமைக்கப்பட்டதே இந்த விதி புத்தகம்.
ஒவ்வொரு நாடும் தனது பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தை எப்படி கண்காணிக்கவேண்டும், அதைப் பற்றி எப்படி அறிக்கை அளிக்கவேண்டும், பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பன பற்றி கேட்டோவிட்ஸா பருவநிலை மாறுபாடு தொகுப்பு, இதுவே விதி புத்தகத்தின் அதிகாரப்பூர்வமான பெயர், விவரிக்கிறது. இவற்றை அமலாக்குவதற்கென முறை எதுவும் சொல்லப்படவில்லையே என்று நம்பிக்கையிழந்த ஒருவர் வாதிடக்கூடும். பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட இலக்கை நாடுகள் மீறினால் என்ன ஆகும்? ஆனால், ஆற்றலை திறம்பட பயன்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதையும், பெட்ரோல் எரிபொருட்கள் பயன்படுத்தப்படுவது சமீபகாலமாக குறைந்திருக்கிறது என்பதையும் இந்தக் கேள்வியுடன் சேர்த்தே பார்க்கவேண்டும். உலகளாவிய அமலாக்க நடவடிக்கைகள் இல்லாமலேயே, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை கூடுதலாக உற்பத்திசெய்ய தேவைப்படும் ஆற்றலின் அளவு 1990லிருந்து 32% குறைந்திருக்கிறது. இந்த வீழ்ச்சி முன்னேறிய நாடுகளை விட வளரும் நாடுகளில் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. மாற்றம் சாத்தியமே என்பதை இது காட்டுவதுடன் உண்மையான சவால் தொழில்நுட்பமோ அல்லது சரியான முறைகளை வடிவமைப்பதோ அல்ல, மாறாக நாடுகளுகள் நியாயமாக நடத்தப்படுவதுதான். முட்டாள், பிரச்சனை அரசியல்தான்!
நியாயமாக நடத்தப்படுவது என்ற விஷயத்தை இப்படி விளக்கலாம்: உலகின் வெப்பநிலை உயர்வு 2 டிகிரி செல்சியசுக்கு மேல் போகாதிருக்க பசுமை வாயுக்களுக்கான கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு அதை இன்றைய உலக மக்கள்தொகையால் வகுக்கவேண்டும். இந்த எண்ணே ஒரு நாடு அதிகபட்சம் வெளியேற்றக்கூடிய பசுமை வாயுக்களின் அளவு என ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல முன்னேறிய நாடுகள் ஏற்கனவே சில நூற்றாண்டுகளாகவே தொழில்மயமாகியிருப்பதால் அவை தங்களுடைய அளவை ஏற்கனவே கடந்துவிட்டன. ஆக, அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படுமளவிற்கு அவை பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தை பெருமளவு குறைக்கவேண்டியிருக்கும். ஆனால், வளரும் நாடுகளுக்கு வளர வாய்ப்பிருக்கிறது. இந்த அளவுகளை நாடுகள் தங்களுக்கிடையில் வர்த்தகரீதியாக பறிமாறிக்கொள்ளலாம் என்றால் பணக்கார நாடுகளிடமிருந்து ஏழை நாடுகளுக்கு செல்வம் கைமாறும். ஒரு பிரச்னையை தீர்க்க முயல்கையில் நாம் மற்றொரு பிரச்னையை தீர்க்க முடியும்.
மாறாக, வெப்பநிலை உயர்வு 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் போகாதிருக்கும்படிக்கு பசுமை வாயுக்களின் வெளியேற்ற அளவை மக்கள்தொகையால் வகுத்து நாடுகளுக்கான இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதாக நினைத்துக்கொள்வோம். இது ஏழை நாடுகளில் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக இருப்பதால் ஆற்றல் நுகர்வின் வளர்ச்சியை பெரிதும் குறைத்துவிடுவதுடன் பணக்கார நாடுகளில் மக்கள்தொகை குறைந்துவருவதால் அவற்றிற்கு சாதகமாகிவிடும், ஆற்றலை திறம்பட பயன்படுத்துவதற்கான கண்டுபிடிப்புகளில் முதலீடு அதிகரிக்கும். சமத்துமின்மை அதிகரிக்கச்செய்வதன் மூலமே இந்த வழியில் பருவநிலை மாறுபாடு பிரச்னையை தீர்க்கமுடியும். கேட்டோவிட்ஸா இந்த அணுகுமுறைக்கு நெருக்கமானது. பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தில் இது புதிய இலக்குகளை கொண்ட சட்டகம். நாடுகளுக்கு இடையிலான சமத்துவமின்மையை வெளிப்படுத்தும் சமீபத்திய வழிமுறைதான் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தங்கள்.
கேட்டோவிட்ஸா மூன்று வழிகளில் சமத்துவ விஷயத்தை அணுகுகிறது. ஒன்று, வளரும் நாடுகளுக்கான இலக்குகள் வளர்ந்த நாடுகளுக்கான இலக்குகளுடன் ஒப்பிடுகிறபோது நீண்ட கால அடிப்படையிலானவை. இதனால் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை பிரிக்கும் எல்லை எது என்பதில் சண்டை நிலவுகிறது. தன்னை வளரும் நாடுகள் பட்டியலில் சேர்க்கவேண்டுமென கேட்டோவிட்ஸா மாநாட்டில் துருக்கி வாதாடியது. இரண்டு, பசுமை வாயு வெளியேற்ற வர்த்தக இலக்குகள் குறித்து சிந்திக்கப்பட்டது. இது வளரும் நாடுகளுக்கு வாயு வெளியேற்றத்தை அதிகரிக்க வாய்ப்பளிக்கிறது. மூன்று, வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் ‘’பருவநிலை நிதி’’ என கேட்டோவிட்ஸா ஒதுக்கியுள்ளது.
துரதிருஷ்டவசமாக, இவையனைத்தும் வளரும் நாடுகளுக்கான சோளப்பொரிகள் மட்டுமே. கடந்த ஆண்டு அட்லாண்டிக் சூறாவளி மட்டும் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியது. கார்பன் வர்த்தக முறை உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் பணக்கார நாடுகளுக்கு வாய்ப்பு அதிகரிக்கிறதே தவிர ஏழை நாடுகளுக்கு அல்ல. வரலாற்றுரீதியான சமத்துவமின்மை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த காலத்தில் பசுமை வாயுக்களை சுற்றுசூழலில் அதிகரிக்கச்செய்து பணக்காரராக ஆன பணக்கார நாடுகள் அதையே இப்போது ஏழை நாடுகள் செய்வதை குறைகூறுகின்றன.
உலக அளவில் ஆற்றலை திறம்பட பயன்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றங்கள் வேறொன்றை வெளிப்படுத்துகின்றன. “மாசுபடுத்துகிறவர்கள் பணம் தருகிறார்கள்” கொள்கை மற்றும் கார்பன் வரிகள் மூலம் பல நாடுகள் பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்கமுடியும் என்பதை காட்டியிருக்கின்றன. ஆனால் சர்வதேச அளவில் வெளியேற்றப்படும் பசுமை வாயுக்கள் பிரச்னையை கையாள்வதுதான் பெரிய பிரச்னை. தேசிய வரி வருவாய்கள் எல்லைகளை தாண்டிச் செல்வதில்லை. பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் பிரச்னைகளான கடல் வெப்பமடைதல், பயங்கரமான சூறாவளிகள், கடல் மட்டம் உயர்வது போன்றவை கடலோரப்பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், தீவுகளிலும் வசிப்பவர்களையே பெருமளவு பாதிக்கிறது. இந்தப் பகுதியிலுள்ள மக்கள்தான் பருவநிலை மாறுபாட்டால் பெருமளவு பாதிகப்படுகிறார்கள் என்றாலும் கேட்டோவிட்ஸா அவர்களைப் பற்றி அக்கறைகொள்ளவில்லை.
பசுமை வாயுக்கள் வெளியேற்றத்திற்கான தேசிய வரிகள் அனைத்திலும் 20% சர்வதேச கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு அது பருவநிலை மாறுபாட்டால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இழப்பீடாக தரப்படவேண்டும்.
அவினாஷ் பெர்சவுத் (apersaud@me.com) மரியா சூறாவளியிருந்து மீண்டுவருதல் திட்டத்தில் டொமினிக்காவின் பிரதமருக்கு சிறப்பு ஆலோசகர் மற்றும் லண்டன் மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட எலாரா கேப்பிடல் நிறுவனத்தின் தலைவர்.