ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மனிதன் – காட்டுயிர் மோதல்

மனிதர்களைக் கொன்று தின்பதை வழக்கமாக கொண்டுள்ள விலங்குகளை அகற்றும் நடவடிக்கை துல்லியத்துடனும் சட்டபூர்வமாகவும் இருக்க வேண்டுமே தவிர ஆரவாரமான, வஞ்சம்தீர்க்கும் செயலாக இருக்கக்கூடாது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிராவில் காட்டுயிர் ஆர்வலர்களுக்கும், மாநில அரசாங்கத்திற்கும், ராலேகான் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மனிதரை கொன்று தின்னும் ஒரு பெண் புலி விஷயத்தில் எந்தத் தரப்பும் சமரசத்திற்கு தயாரில்லாத நிலை ஏற்பட்டது. இரண்டு குட்டிகளைக் கொண்ட அந்தப் பெண் புலியை சுடுவது என்று வனத்துறை முடிவு செய்தபோது அதை தடுக்க காட்டுயிர் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். சுடுவதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அந்தப் பெண் புலியை உயிருடன் பிடிக்க முடியாவிட்டால் மாநில வனத்துறை அதை கொல்லக்கூடும். மனிதர்கள் அல்லாதவர்கள் மனிதர்களை கொல்வது என்பது எப்போதுமே நம்ப முடியாததாகவும், பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது. இழப்பு அல்லது பாதிப்பிற்கான காரணம் புலி போன்ற பெரிய, அனைவரும் அறிந்த விலங்காக இருக்கையில் நிலைமை மேலும் மோசமாகிறது. ஒரு விலங்கு மனிதரை தின்கிறது என்பது உறுதியாகக் கூற முடியாத விஷயம். ஏனெனில் இது மிக அபூர்வமாக நடப்பது என்றும் ஒரு குறிப்பிட்ட விலங்குதான் கொல்கிறது என்று உறுதிபடுத்துவதும் கடினம் என்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நேரத்தில் ஓர் ஆபத்தான விலங்கு தங்களுக்கு அருகாமையில் இருப்பது குறித்த அப்பகுதியில் மக்களின் அச்சமும் உண்மையானதே.

ஆக, இத்தகைய சூழலில் யாரை என்பதை மட்டுமல்ல எதை குற்றம் சொல்வது என்ற கேள்விக்கு பதிலளித்தாக வேண்டும். காட்டு விலங்கிற்கான ‘’குரலாக’’ இருக்க விரும்பும் ஆர்வலர்கள் – இந்தப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தை அணுகியவர்கள் – விலங்கை குற்றம் சொல்ல முடியாது; மனிதர்களின் செயல்பாடுகளால் உருவாகும் பிரச்னையே நெருக்கடிக்கான காரணம் என்கின்றனர். ராத்தம்போரில் உஸ்தாத் என்று பெயரிடப்பட்டிருந்த புலி, ஆட்களை அடித்துத் தின்கிறது என்று சொல்லப்பட்டது, விஷயத்திலும் உச்ச நீதிமன்றத்தில் இதே போன்ற கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் உஸ்தாத் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டது. இந்த விஷயத்தில் ஆட்கள் கொல்லப்படுவதற்கான காரணம் ஒரு குறிப்பிட்ட விலங்குதான் என்று உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்ய முடியாததால் இதில் தலையிடவில்லை என்பது நியாயமே. இந்த விஷயத்தில் முடிவெடுப்பதை வனத்துறையால் வழிநடத்தப்படும் சுதந்திரமான, நம்பிக்கைக்குரிய கள ஆய்விற்கு விட்டுவிட வேண்டும்.

புலிகள் மற்றும் சிறுத்தைகள் மத்தியில் ஆட்களை அடித்துக்கொல்வது எந்த குறிப்பிட்ட புலி அல்லது சிறுத்தை என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. இதற்கு முன்னர் சில சமயங்களில் இமாச்சல் பிரதேசத்திலும் உத்தராகண்டிலும் ‘’ஆட்களை தின்னும்’’ சிறுத்தைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. ஆனால் கொல்லப்பட்ட அந்த சிறுத்தைகள்தான் ஆட்களை கொன்று தின்றன என்பதற்கு எந்த ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. ஒவ்வொரு சிறுத்தைக்கும் அல்லது புலிக்கும் தனித்துவமான புள்ளிகள் அல்லது பட்டைக்கோடுகள் இருக்கும். ஆட்களை அடித்துத் தின்பதை ஒரு புலி வழக்கமாக வைத்திருக்கிறது என்பதை உறுதி செய்ய அதை நேரடியாக பார்த்திருக்க வேண்டும் அல்லது கேமராவில் படம்பிடித்திருக்க வேண்டும். தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் அளிக்கும் வழிகாட்டுதல்களின்படி ஒரு புலி ‘’மனிதரைக் கொல்கிறது’’ அல்லது ‘’மனிதரைக் கொன்று தின்கிறது’’ என்றால் அது குறித்து புலனாய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும். ‘’மனிதரைக் கொல்கிறது’’ என்ற வகைக்குள் வருவது எதிர்பாராது நடக்கும் கொலைகளாகும். அது மீண்டும் மீண்டும் நடக்கின்ற விஷயமல்ல.

ஆட்களை கொன்று தின்கிற விலங்குகள் கையாளப்படும் விஷயம் எப்படி அறமற்ற செயல்பாடுகளாக இருக்கின்றன என்ற விஷயம் தெரியவந்துள்ளது. காட்டுயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972-ன்படி வேட்டையாடுவது என்பது குற்றம். மனித உயிர்களுக்கு ஆபத்து என்கிற பட்சத்தில் மட்டுமே தலைமை காட்டுயிர் காப்பாளரின் அனுமதி பெற்று பாதுகாக்கப்பட்ட காட்டுயிர்களை கொல்லலாம். மனிதர்களை கொன்று தின்பதற்கு பழகிவிட்ட விலங்குகளை சட்டப்படியாக அகற்றலாம் அல்லது கொல்லலாம். அதை அரசு நடவடிக்கையின் மூலம், துல்லியமாக கணக்கிட்டு செய்ய வேண்டும். அந்தச் செயல் வஞ்சம் தீர்ப்பதாக இருக்கக் கூடாது. ‘’பிரச்னைக்குரிய விலங்குகளை’’ கொன்ற பிறகு அதை கொன்றவர் தனது தோளில் போட்டபடி அல்லது காலடியில் போட்டு விலங்கின் மீது துப்பாக்கிக்குழல் முனையை வைத்தபடி இருக்கும் படங்கள் மிகப் பரவலாக உலவுகின்றன, பகிரப்படுகின்றன. நீண்ட காலத் தீர்வுகளை நோக்கி செயல்படுகின்ற, இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துவதில் அற ரீதியாக நடந்துகொள்கின்ற நவீன அரசின் விழுமியங்களை அல்லாமல், இந்தப் படங்கள் வேட்டையாடி வெற்றிகொள்வது, வஞ்சம் தீர்ப்பது போன்ற விழுமியங்களை உருவாக்கின்றன. இவற்றை கணக்கிலெடுத்துக் கொண்டு, இறந்த காட்டு விலங்குகளின் படங்களை  அச்சு அல்லது மின்னணு ஊடகங்களில் வெளியிடுவதை தனது 2016ஆம் ஆண்டு தீர்ப்பில் உத்ராகண்ட் உயர் நீதிமன்றம் தடை செய்தது.

மனிதர்களைக் கொன்று தின்கிற விலங்குகள் விஷயத்திற்கான தீர்வு பற்றிய விவாதம் காட்டுயிர் பாதுகாப்பு பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர விலங்குகளின் உரிமைகள் தொடர்பானதாக இருக்கக்கூடாது. இங்கு பாதுகாத்தல் என்பது உயிரினங்கள் தொடர்ந்து நீடித்திருப்பதற்கான நடவடிக்கையே. மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இதை செய்ய முடியாது. இயற்கை வளங்களை, காட்டுயிர்களை நன்கு பாதுகாப்பதற்கான செய்முறைகள் மனித செயல்பாடுகளின் ஆதிக்கத்திற்குள்தான் இருக்கின்றனவே தவிர வெளியே அல்ல. ஆனால், விலங்குகளின் உரிமை என்பது யாருக்கு பாதிப்புகள் என்னவாக இருந்தபோதிலும் தனிப்பட்ட விலங்குகளின் நலனுக்கு முக்கியத்துவம் தருவது. ஆகவே ஆட்களை அடித்துத் தின்பதை வழக்கமாக வைத்திருக்கும் விலங்கை உயிருடன் வைத்திருக்க வேண்டுமென கோருவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பரப்பியத்தின் மூலமோ அல்லது விலங்கு உரிமைகளை தீவிர நிலைக்கு எடுத்துச்செல்வதன் மூலமோ மனிதர்-விலங்கு சகவாழ்வை சாத்தியப்படுத்த முடியாது.

இந்த மோதலுக்கு எதை குற்றம் சொல்வது என்பதை தீர்மானிக்க மனித-காட்டுயிர் மோதலுக்கான காரணங்களை, சகிப்பின்மையை உருவாக்குவது எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். காட்டுயிர் பாதுகாப்பிற்காக ஏழைகள் எந்தக் கைமாறையும் எதிர்பார்க்காமல் இழப்பை மட்டும் ஏற்க வேண்டுமென எதிர்பார்க்க முடியாது. பிற அழுத்தங்களும் மனித-காட்டுயிர் மோதலாக வெளிப்படலாம். மக்களின் தினசரி விரக்திகளுக்கு விலங்கு குலக்குறியாக மாறக்கூடும்.

தீர்வுகளை அதிகபட்சமாக மேம்படுத்த முயலும் துடிப்பான, ஆரோக்கியமான களப்பணிதான் இதற்கான ஒரே பதில். பயிர் மற்றும் கால்நடை காப்பீட்டு திட்டங்களை எளிமையானதாக, செயல்படத்தக்கதாக ஆக்குவதும், காட்டு விலங்கை தவிர்க்கும் நடத்தையை பரவலாக மக்களிடையே கொண்டுசெல்வதும் செய்யப்பட வேண்டும். மோதல் நிகழ்வுகளை வனத்துறை நியாயமான முறையிலும், வேகமாகவும், முரணற்ற வகையிலும் பார்க்க வேண்டும். விலங்குகள் கொல்லப்படுகிறபோது அது காட்சிபொருளாக்கப்படுவதை எல்லா வகையிலும் தடுத்தாக வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பது போன்ற குறிப்பான விஷயங்களில் மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ளும் வகையில் காதுகொடுத்து கேட்க வேண்டும். காட்டுப் பகுதிகளில் மனித செயல்பாடுகளின் காரணமாக நெருக்குதல்கள் வளர்கையில் துல்லியமான, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே உரிய தீர்வுகள் என்பது நமது விருப்பத்தைப் பொறுத்த விஷயமல்ல, மாறாக இன்றியமையாத ஒன்று.

Back to Top