ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அனைவரின் நலனுக்கானதாக இந்துத்துவா இருக்க முடியுமா?

ராஷ்டீரிய சுயம்சேவக் சங்கம் கூறும் அனைவரையும் உள்ளடக்கிய இந்துத்துவா என்பது தற்காலிகமானது, உண்மையல்ல

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பொதுத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கையில் பல்வேறு அரசியல் சக்திகள் வெற்றிக் கூட்டணிகளை அமைக்கும் பொருட்டு தங்களது நிலைகள் குறித்து கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொது நலன் என்பதன் அடிப்படையில் அமைக்கப்படும் ஒருவித நிலைபாடு அல்லது வேறுபட்ட நிலைபாடு ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கிறது என்பது முக்கியமாக கவனத்திற்குரியது. உதாரணமாக, எதிர்க் கட்சிகள் தாங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது, மக்களாட்சி, மதச்சார்பின்மை, அச்சத்திலிருந்து விடுதலை ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய உலகளாவிய பார்வைக்கு ஆதரவாக இருப்பது என்ற போக்கு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மறுபுறத்தில், அனைத்துந்தழுவிய பொது நலனுக்கு உகந்தது இந்துத்துவா எனக் கூறி மக்களை நம்பவைக்க ராஷ்டீரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.ன்) தலைவரும், பாரதீய ஜனதா கட்சியும் (பாஜக) முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சங் பரிவாரத்தின் தலைவர் பேசும் ‘’அனைவரையும் உள்ளடக்கிய’’ நிலை என்ற கூற்றில் அவரது தன்னம்பிக்கை வெளிப்படுகிறதே தவிர சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பு ஏதுமில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தொடர்ச்சியாக நிகழ்த்திவரும் உரைகளும், ‘’காங்கிரஸ்முக்த் பாரத்’’ (காங்கிரஸ் இல்லாத இந்தியா) என்ற நரேந்திர மோடி-அமித் ஷாவின் கோஷத்தை மட்டுப்படுத்தும் முயற்சியும் தங்களது நிலைபாட்டை வேறு மாதிரியாக காட்டிக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். மேலும், எல்லோரையும் அரவணைத்து செல்வது போல் காட்டிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்.ன் இந்த முயற்சியை இப்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களிடம் நிலவும் மிகப் பரவலான அதிருப்தியை உணர்ந்திருப்பதன் விளைவாகவும் பார்க்கலாம். முறையான அரசியல் அதிகாரத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பதற்கான இந்த முயற்சிக்கான உந்துதலின் விளைவே இந்துத்துவாவின் பொருளை விரிவுபடுத்தும் முயற்சி. ஆகவே, முறையான அரசியல் அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு ‘’விருப்பம் இல்லை’’ என்று காட்டிக்கொள்வது ஓர் அத்யாவாசியமான பாதுகாப்பு தந்திரம்; தனது இந்துத்துவா திட்டத்தை முன் நகர்த்துவதற்கான அரசியல் உறுதி இது. தேர்தல் என்று வருகிறபோது தன்னை பொதுமக்களிடம் ஒரு மிதவாதியாக ஆர்.எஸ்.எஸ். காட்டிக்கொள்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய இந்துத்துவாவின் அனைவருக்குமான நலன் பற்றிய கூற்றின் உள்ளடக்கம் பற்றி ஒரு அடிப்படையான கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும். ஆதிக்க கட்டமைப்புகளிலிருந்து தொடர்ந்து எழும் தீர்க்கப்பட முடியாத பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளைப் பற்றி அதற்கு எந்தக் கவலையும் இல்லை என்பதால் இந்தக் கூற்று அறிவுபூர்வமற்ற, சிந்தனையற்ற ஒன்று. ஆனால், இந்த முரண்பாடுகளைப் பற்றி எதுவுமே பேசாமல் இந்துத்துவாவை அனைவருக்குமான ஒன்றாக ஆக்க முயல்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கூற்று.  இன்று எளிதில் பாதிப்பிற்குள்ளாகும் நிலையிலுள்ள சில சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள சமத்துவமின்மை, அநீதி, கண்ணியக்குறைவுகள், சுதந்திரமின்மை ஆகியவை இருப்பது பற்றி பேசாமல், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி பேசாமல் ‘’அனைவருக்குமான இந்துத்துவா’’ என்ற இறுதிப் புள்ளிக்கு முந்துகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர். தன்னைத் தானே ஆராய்ந்துணரும் முயற்சி ஏதுமின்றி, தன்னைப் பற்றி எந்தக் கேள்விகளும் கேட்டுக்கொள்ளாமல் அனைவரையும் உள்ளடக்கிய இந்துத்துவா பற்றி இவ்வாறு பேசுவது என்பது தாராளவாத உணர்வுக்கே எதிரானது. சாதி, பாலினம், மற்றும் சமூகம் சார்ந்த வன்முறைகளின் சமூக உற்பத்தியில் ஒருவரது அமைப்பு எந்த அளவிற்கு பங்காற்றியிருக்கிறது என்பது தன்னைத் தானே ஆராய்ந்துணர்வதன் ஒரு பகுதியாகும். இந்த ஆராய்ந்துணரும் செயலின் ஒரு பகுதியாக, கலப்புத் திருமணத்தை தான் ஆதரிப்பதாக ஆர்.எஸ்.எஸ். கூறிக்கொள்வதற்கு முன்னர் கலப்புத் திருமணங்களுக்கு எதிரான ஆணாதிக்க சகிப்பின்மையை ஆர்.எஸ்.எஸ். விமர்சித்தாக வேண்டும் என்றே ஒருவர் எதிர்பார்ப்பார். அதே போல், ‘’நம்ப முடியாத இந்தியா’’ என்ற கருத்தாக்கத்தை புகழும் முன்னர் ’’ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் இந்தியா’’ பற்றி விமர்சிப்பதற்கு அவர் முன்னுரிமை தரவேண்டும் என்றே ஒருவர் எதிர்பார்ப்பார். இந்த வகையில், மையநீரோட்ட தேசியவாதிகளுக்கு உறைக்கும்படியாக ஜோதிராவ் புலே மற்றும் பி.ஆர். அம்பேத்கர் மேற்கொண்ட இடைவிடாத முயற்சியை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இந்துத்துவா அனைவரையும் உள்ளடக்கியது என்ற அவரது கூற்றில் வெளிப்படும் தன்னம்பிக்கையானது ஒருவர் தன்னைத் தானே ஆராய்ந்துணர்வதற்குத் தேவையான ஆற்றலையே பலவீனப்படுத்திவிடுகிறது.

தன்னைத்தானே ஆராய்ந்துணர்வது என்பது அற ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகவும் அவசியமான சவால். இதை எதிர்க்கட்சிகளும் சீரிய முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். மக்களாட்சியும் கண்ணியமும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் இந்தியக் குடியரசை ஆக்குவதற்கான மாற்றுத் திட்டத்தை இந்த சவால்கள் வழங்குகின்றன.

ஆகவே எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் இணக்கத்தை உண்டாக்குவது என்பது நமது கற்பனையில் உருவாகும் விருப்பமல்ல அல்லது வெற்று வீராப்பு பேச்சல்ல. மாறாக, இது உண்மையிலேயே பெரும் சவால். அப்படியெனில், சாத்தியத்திற்குரிய மாற்றுக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்வைத்து மக்களின் அதிருப்தியை எதிர்க்கட்சிகள் அணிதிரட்டுவது என்பது மிகவும் அவசியம். சமூக ஒற்றுமை, நிலைத்ததன்மை ஆகியவற்றிற்கான அர்ப்பணிப்புடன் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்கும் வகையில் அந்த மாற்று இருக்க வேண்டும். அத்தகைய ஒரு திட்டம் இல்லையெனில் அது அரசியல் போட்டிக் களத்தில் தடையை ஏற்படுத்துவதுடன் எதிர்க்கட்சிகள் மீதான மக்களின் சந்தேகத்திற்கு வழிவகுத்துவிடும். சந்தேகம், அதிலும் குறிப்பாக நடைமுறை அரசியலில் பாஜக தீவிரமான போட்டியாளராக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என்பது நமக்கு அனைவருக்கும் தெரியும்.

இன்றைய அரசாங்கம் மக்களாட்சி நெறிகளை நசுக்குகிறது என்று கூக்குரலிடுவதோ அல்லது இந்த ஆட்சியை பாசிசம் என்று கூறுவதோ மக்களாட்சியை காப்பாற்றாது. மக்களை சந்தேகத்திலிருந்து விலக்கி தங்களது சொந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் நிர்ணயகரமாக, செயலூக்கத்துடன் ஈடுபட வைக்க தொடர்ச்சியாக அவர்களை மறு அரசியல்மயப்படுத்துவது அவசியம். கண்ணியமான வேலை, தரமான வாழ்க்கை, நாகரீகமான சமூகத்தை கட்டமைப்பது போன்ற மிக ஆதாரமான பிரச்னைகளுக்கான அணிதிரட்டலுடன் மக்களின் எதிர்காலம் சந்தேகத்திற்கிடமின்றி பிணைந்திருக்கிறது. தலித்-ஆதிவாசி பெண்கள் அமைப்புகள், இடதுசாரி கட்சிகள், மக்கள் இயக்கங்கள் போன்ற ஆங்காங்கே தனித்தனியாக நடக்கும் சில அணிதிரட்டல்களைத் தவிர்த்துப் பார்த்தால் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான திட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள் எதுவும் மையநீரோட்ட எதிர்க்கட்சிகளிடம் இல்லை. இந்த இன்மைதான் எதிர்க்கட்சிகளிடையே உருவாகக் கூடிய குழப்பத்திற்கான முதன்மையான காரணமாக அமைந்துவிடும்.

Back to Top