ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

திருநங்கை மசோதா தோல்வியுறும் இடம்

திருநங்கை சமூகத்தின் உரிமைகளை பாதுகாப்பதில் இடஒதுக்கீடு கொள்கை உடனடியாக மிகவும் அவசியம்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (தே.ம.உ.ஆ) சமீபத்தில் திருநங்கைகள் சமூகம் குறித்து தேசிய அளவில் கணக்கெடுப்பு நடத்தியதில் இச் சமூகத்தைச் சேர்ந்த 92% பேர் பொருளாதார நடவடிக்கைளிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளது. ஒரு சமூகப் பிரிவின் பெரும் பகுதியினர் அடிப்படை வாழ்வாதார உரிமைகள் கூட மறுக்கப்பட்டு கட்டமைப்புரீதியாக விலக்கிவைக்கப்பட்டிருந்தும் நாம் ‘’நவீன’’ உலகில் வாழ்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருப்பது மிகவும் அபத்தம். வேறு மாதிரியான வேலைகள் ஏதும் கிடைக்காதாவறு சமூகத்தில் விலக்கி வைக்கப்படுவதால் அவர்கள் பிச்சையெடுத்தல் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். திருநங்கைகள் சமூகம் எதிர்கொள்ளும் முதன்மையான நெருக்கடி பாலின குடியுரிமை அவர்களுக்கு மறுக்கப்படுவதுதான். தே.ம.உ.ஆ. வசமுள்ள தரவுகளின்படி இந்தியாவில் திருநங்கைகள் சமூகத்தில் 99% பேர் சமூக ஒதுக்கலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு சாதரண ஆண் சக குடிமக்களிடம் பொது இடங்களில் பெறும் மரியாதையை ஒரு திருநங்கை பெற முடியாது. ஏனெனில் அவர்களது உடலே இழுக்கிற்கு உரியதாக கருதப்படுகிறது. விளிம்புநிலை சமூகங்களிலேயே திருநங்கைகள் சமூகம் வகிக்குமிடத்தின் காரணமாக அவர்கள் பாலியல் வன்முறைக்கும் மருத்துவ புறக்கணிப்பிற்கும் ஆளாகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தங்களது குடும்பங்களிலிருந்து வெளியேறியவர்களாக இருக்கிறார்கள். இதுவே சமூக அங்கீகாரத்தின் முதன்மையான வடிவங்களுள் ஒன்றிலிருந்து இவர்களை விலக்குகிறது. தே.ம.உ.ஆ. கணக்கெடுப்பின்படி திருநங்கைகளில் வெறும் 2% பேர் மட்டுமே தங்களது குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

இதை சரிசெய்வதற்கான, திருநங்கை சமூகத்திற்கு வாய்ப்புகளை உருவாக்கித்தர செய்யப்பட்ட முயற்சியே, திருநங்கை (உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2014. ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால் இந்த மசோதா இன்றுள்ள நிலையில் 2017ல் நிலைக் குழு பரிந்துரைத்த இரண்டு முக்கியமான பரிந்துரைகளை சேர்க்காது புறக்கணித்துவிட்டது. கல்வி நிறுவனங்களிலும் வேலைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது முதல் பரிந்துரை. பொருளாதார செயற்பாடுகளிலிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்பட்டிருப்பதை இந்த வகையான இடஒதுக்கீடு சரிசெய்யும்.

பெரும்பாலும் இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும் இந்தியா போன்ற நாட்டில் அவர்கள் திருமணம் செய்துகொள்வது, சேர்ந்துவாழ்வது ஆகியவை மிகவும் கடினம் என்பதால் அவற்றிற்கான சட்ட அங்கீகாரத்தை வழங்குவது என்பது இரண்டாவது பரிந்துரை. தங்களது சமூகக்கலாச்சார யதார்த்தத்தை வரையறுப்பதில் இரண்டு பாலினங்களுக்கு மட்டுமே இடம் என்பதில் இந்தியர்கள் மிகவும் பிடிவாதமாக உள்ளனர். திருநங்கை சமூகம் ஆளாகியுள்ள விலக்கத்தின் அரசியலானது, பாலினம் இரண்டு மட்டுமே என்ற வரையறையின் மேலாதிக்கத்தில் வேர்கொண்டுள்ளது. சொல்லப்போனால் இந்த மசோதாவின் முதல் வரைவில் திருநங்கை என்பவர் யார் என்று வரையறுக்கப்பட்டுள்ளதிலேயே பிரச்னையிருக்கிறது. ஆணும் அல்லாதவர், பெண்ணும் அல்லாதவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய வரையறை தரக்குறைவானது மட்டுமல்ல, பாலின இருமைக்கு அப்பாற்பட்டு சிந்திக்க முடியாதிருப்பதையும் காட்டுகிறது. இதனால் திருநங்கைகள் எதிர்மறையில் வரையறுக்கப்படுகின்றனர். ஆனால் நல்லவேளையாக மசோதாவின் கடைசி வரைவில் இது சரிசெய்யப்பட்டு திருநங்கையை திருப்திகரமாக வரையறுத்துள்ளனர்: ‘’பிறப்பின்போது தனக்கு அளிக்கப்பட்ட பாலினத்திற்கு பொருந்தாத பாலினத்தைக் கொண்டவர்.’’

திருநங்கைகள் மீது மனம்போனபோக்கில் வழக்கு தொடுக்க ஏற்கனவே பல சட்டங்கள் இருக்கின்றன.  பிச்சையெடுப்பதற்கு எதிரான சட்டம் அவற்றுள் ஒன்று. திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பது என்பது நிதி விஷயத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். ‘’இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளை’’ தடை செய்யும் இந்திய தண்டனை தொகுப்புச் சட்டத்தின் 377ஆம் பிரிவும் பெரும்பாலும் திருநங்கைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. 377ஆம் பிரிவு கிரிமினல் குற்றமாக இருக்கும் வரை திருநங்கைகள் கைதாவது என்பது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். ஆகவே திருநங்கைகளின் பாலியல் உரிமைகள் மற்றும் அடையாளத்தை பாதுகாக்கும் வகையிலான சட்ட விதி அவசியம். இந்த வகையில், அவர்களுக்கு திருமணம் செய்துகொள்ள, சேர்ந்து வாழ சட்ட அங்கீகாரம் அளிப்பது என்ற இரண்டாவது பரிந்துரை மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும். திருநங்கைகளை பாகுபடுத்துவது என்றால் என்ன என்பதை தெளிவாக வரையறுப்பதிலும் இந்த மசோதா தோல்வியடைகிறது. ஆகவே, இந்த மசோதா முற்போக்கானது என்று கருதப்பட்டாலும் திருநங்கைகளுக்கு பாலியல் குடியுரிமையை விரிவுபடுத்துவது பற்றிய மையமான பிரச்னையை தொடவேயில்லை.

திருநங்கை சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அளவில் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் தமிழ்நாட்டு சட்டத்தை மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று கூறப்படுகிறது. 2004ல் திருநங்கைகளுக்கு என தனி வாரியம் ஒன்று தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. திருநங்கைகளுக்கு வீடுகட்டிக்கொள்ள சலுகையளித்து, தொழிற்பயிற்சி மையங்கள் ஆகியவற்றை அமைத்ததுடன் பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும் குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்துகொள்ள வசதி செய்து தரப்பட்டது.. 2018ல் கேரளாவில் பாலியல் மாற்று அறுவை சிக்கிச்சை செய்துகொள்ள திருநங்கைகளுக்கு அரசு ரூ. 2 லட்சம் தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மருத்துவ சேவைகளைப் பெற, போலி மருத்துவர்களின் சுரண்டல், அவதூறுகளிலிருந்து தப்பிக்க அரசாங்கத்திடமிருந்து இத்தகைய உதவிகள் திருநங்கை சமூகத்திற்கு உடனடியாக தேவைப்படுகிறது.

தினசரி பொதுவாழ்க்கையில் திருநங்கைகளும் எந்த விதமான வித்தியாசமுமின்றி ஒன்றுகலந்து வாழும் சூழலை உருவாக்கும் வகையில் இந்த மசோதா அமைய வேண்டும். பொது இடங்களில், பணியிடங்களில், வீடுகளில் திருநங்கைகளின் இருப்பானது சாதாரண நிகழ்வாக இருக்க இந்த சட்டம் உதவியாக இருக்க வேண்டும்.

Back to Top