ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வேலைவாய்ப்பு விஷயத்தில் இந்தியாவின் தந்திரத்தை கட்டுடைத்தல்

தொழிலாளர்களை ஒப்பந்தமயமாக்கலுக்குள் கொண்டுவருவதை ஒரு பொருளாதாரத் தேர்வு என்பதை விட அரசியல் நடவடிக்கை என்பதே சரி.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பொதுத் துறையில் 24 லட்சம் வேலைகள் நிரப்பப்படாது தேங்கிக்கிடக்கின்றன என்று ஊடகங்களில் வெளியான செய்தியானது, வேலை உருவாக்கம் பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் கூற்று பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியிருக்கிறது. நாட்டின் வேலைவாய்ப்பில் ஆகப் பெரும் பங்களிப்பாளராக பொதுத் துறை இருக்கையில், அரசாங்கம் உருவாக்கியிருப்பதாக சொல்லும் வேலைகளின் இயல்பு என்ன என்பதை நிரப்பப்படாது காலியிடங்களாகவே இருக்கும் இந்த வேலைகள் ஏராளமாகவே சொல்கின்றன. கடந்த பத்தாண்டுகளாக அமைப்புரீதியான துறைகளால் உருவாக்கப்பட்ட வேலைகளை ஒப்பந்தமயமாக்குவது என்ற போக்கு வளர்ச்சியை உருவாக்குபவர்களின் கவலைக்குரிய விஷமாக இருக்கிறது. அரசாங்கத்தின் கொல்லைப்புறத்திலேயே பிரம்மாண்டமான அளவிற்கு காலிப் பணியிடங்கள் இருப்பது, தொழிலாளர்களை ‘’ஒப்பந்தமயமாக்கத்திற்குள்’’ கொண்டுவருவதற்கான கொள்கைக்கான உந்துதல் அரசாங்கத்திடம் இருப்பதையே காட்டுகிறது.

தொழிலாளர்களை ஒப்பந்தமயத்திற்குள் கொண்டுவருவது என்ற இந்த சமகாலத்திய போக்கு அரசின் கொள்கையால் உந்தப்பட்டது என்பதை அரசாங்கம் மறுக்கிறது. ஒருபக்கம், வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் (என்.எஸ்.எஸ்.ஒ) வேலை-வேலையின்மை மதிப்பீடுகளை விட்டுவிட்டு பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் (இ.பி.எஅப்.ஒ) முன்னுக்குப்பின் முரணான தரவுகளை பயன்படுத்தி, கவலைதரும் ஆதாரங்களை மறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. மறுபக்கம்,  ’’வெளியே இளைஞர்கள் பக்கோடா விற்கிறார்கள்…நாளொன்றுக்கு 200 சம்பாதிக்கிறார்கள் என்பதும் வேலைவாய்ப்பு உருவாக்கம்தான்’’ என்று பிரதமர் சமீபத்தில் கூறியிருப்பது வேண்டுமென்றே ‘’முறைசாரா,’’ ‘’சுயவேலை,’’ ‘’தொழில்முனைவோர்,’’ ஆகிய பதங்களை ஓன்றுக்கு பதிலாக மற்றொன்றை பயன்படுத்தி ஏதோ வேலைதேடுபவர்கள் தாங்களாக ‘’விரும்பி’’ சமூக பாதுகாப்பு போன்ற பலன்களை துறந்துவிட்டு அதிக லாபத்திற்காக நெகிழ்வுத்தன்மை கொண்ட சிறிய அளவிலான, குறைவான உழைப்புப் பிரிவினை இருக்கக்கூடிய பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுவதாக காட்டப்படுகிறது. முறைசாரா அல்லது அமைப்புசாரா துறையில் குறைவான வருமானம், நிரந்தரமற்ற வேலை, மிகக் குறைந்த வாழ்வாதார உற்பத்தி என உயிர்வாழ்வதற்கு மட்டுமே போதுமான அளவில் வருமானம் கிடைக்கும் இந்த வேலைகளை எந்த வகையிலும் தொழில்முனைவோர் வேலைகள் என்று அழைக்க முடியாது. முறைசாரா துறையில் தொழிலாளர்கள் ஒப்பந்தமயத்திற்கு ஆளாவதற்கு அவர்களது குறைந்த கல்வித்தகுதி மற்றும் திறன் ஆகியவற்றை காரணம் காட்டுகிறார்கள் எனில் அமைப்புரீதியான துறைகளில் நன்கு படித்த, அதிகத் திறன்கள் கொண்டவர்களும் ஒப்பந்தப் பணியாளர்களாவது ஆச்சர்யத்திற்குரியது. அதிலும் குறிப்பாக பல்கலைக்கழக கல்வித்துறை போன்ற தனிச்சிறப்பு கொண்ட துறைகளிலும் இது நிகழ்வது புரிந்துகொள்ள முடியாதது.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் கல்விக்கு கட்டனம் செலுத்த வேண்டும் என்பதால் நல்ல திறன் கொண்ட தொழிலாளார்களும் முறைசாரா வேலைகளை விரும்பி தேர்வு செய்கின்றனர். ஆனால் இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இருக்கிறதா என்பது சந்தேகமே. இந்திய இளைஞர்கள் மத்தியில் அவர்களது மனப்போக்கு, கவலைகள், விருப்பங்கள் குறித்து 2017ல் சென்டர் ஃபார் த ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டிஸ் ஆய்வு நடத்தியதில் இந்தியாவில் வேலையை தேர்ந்தெடுப்பதில் வருமானத்தை விட வேலையின் நிரந்தரத்தன்மைக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுவது தெரியவந்தது. மேலும், ஐந்தில் மூன்றுக்கும் அதிகமான இளைஞர்கள் அரசாங்க வேலையையே விரும்புகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலைமையில் மாற்றம் இல்லை.

அரசாங்க வேலையே மிகவும் பாதுகாப்பானது என்ற பாரம்பரியமான கருத்து வலுவாக உள்ள நாட்டில் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான நெருக்கடி பொதுத் துறைக்கு எப்போதும் அதிக அளவில் இருக்கிறது. சமீபத்தில் ரயில்வே துறையில் 90,000 காலியிடங்களுக்கு 12.4 லட்சம் பேர் மனுச் செய்திருந்தனர். கல்வியால் கிடைக்கும் லாபம் பற்றிய பொருளாதாரக் கொள்கைகளோடு இந்த நிலை ஒத்துப்போகவில்லை. இந்தியாவில் பொதுத் துறையில் தொடர்ந்து காணப்படும் குணங்களான பணியாளர்களை தவறாக ஒதுக்கீடு செய்வது, லாபத்தை அதிகரிக்க அரசுக் கொள்கைகளை மாற்றுவது ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து நிலைமை மோசமாகிறது. அதே நேரத்தில், அரசாங்க வேலையைப் பெறுவதற்கான விலையும் தாங்க முடியாததாக இருக்கிறது. இந்த அமைப்பில் வெற்றி பெற முடியாத வேலை தேடும் இளைஞர்கள் முறைசாரா துறைகளுக்குச் செல்கின்றனர். இதை அவர்கள் தாங்களாக ‘’விரும்பி’’ செய்வதாகக் கூறுவது தவறு. அதே நேரத்தில், பணியாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் கொள்கைகளை பின்பற்றுவதால், அதாவது தொடர்து சம்பள ஆணையங்கள் மூலம் சம்பளங்களை உயர்த்துவதன் காரணமாக வேலைக்கு ஆளெடுப்பது என்பது அரசாங்கத்திற்கு பெரும் செலவு பிடிக்கும் விஷயமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக மாநில அரசாங்கங்களால் தங்களது எல்லைக்குட்பட்ட நிதியாதாரங்களிலிருந்து தங்களது பணியாளர்களுக்கு மத்திய அரசாங்கப் பணியாளர்களுக்கு இணையாக சம்பளம் தர முடிவதில்லை. இதன் விளைவாக நிரந்தரப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்ப ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் அரசாங்கங்கள் தங்களது ‘’மக்கள் நலன் அரசு’’ பிம்பத்தை காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.

நவீன தாராளவாதத்தின் இயல்பான விளைவுதான் வேலைகளை ஒப்பந்தமயமாக்குவது என்பது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. வேலைகளை ஒப்பந்தமயமாக்குவது என்பதை எந்த ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்திற்கு மட்டும் உரிய கொள்கை என்று குறுக்க முடியாது. பொதுவாக அனைத்து நவீன தாராளவாத அரசுகளுக்கும் உரிய பண்பு இது. ஒருபக்கம் இது தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வர்த்தக ரீதியாக பார்க்கிறபோது ஒப்பந்தமயமாக்கல் செலவை குறைக்கிறது. சந்தையில் வெற்றிகரமாக நீடித்திருக்க உற்பத்தியில் மெதுவாக ஏற்படும் வளர்ச்சியை விட வேலைகளை ஒப்பந்தமயமாக்குவது அதிக உதவிகரமாக இருக்கிறது. அதே நேரத்தில், செலவுகளை குறைத்து நிதியை சிக்கனம் பிடிக்கும் நவீன தாராளவாத கொள்கையுடனும் இது நன்கு பொருந்திப்போகிறது. இந்தச் சூழ்நிலையில் அதிக கவலை தருவது என்னவெனில் அரசாங்கம் தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்க கட்டமைப்புரீதியான இந்த மாற்றங்களை கண்டுகொள்ளாமல் விடுகிறது. இந்த மாற்றங்களை கவனத்தில்கொள்ளாத, இவற்றிற்கு பொறுப்பேற்காத நிறுவனங்கள், நவீன தாராளவாதத்தின் தவிர்க்க முடியாத விளைவான சமூகப் பிளவுகள் ஏற்படுத்தும் தாக்குதல்களை குறைக்க முடியாது.

Back to Top