ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வாங்கமுடிவதுடன் பெறமுடிவதை சமன் செய்தல்

விநியோக மேலாண்மை உத்திகள் இல்லாமல் அத்தியாவசிய மருந்துகளின் விலையை நிர்ணயிப்பது அவற்றை பெறமுடிவதை உறுதி செய்யாது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்தியாவில் மருத்துவசேவை அமைப்பானது பேராசை கொண்ட தனியார் துறையின் பிரம்மாண்டமான வளர்ச்சியாகவும், மருத்துவசேவையை பெற முடியாத அளவிற்கு பணச் செலவுபிடிக்கும் விஷயமாகவும், குறிப்பாக ஏழைகளால் அணுகவே முடியாத விஷயமாகவும் இருக்கிறது. ஒன்று இந்த மக்களால் இந்த அளவு அதிகமான செலவை செய்ய முடியாது அல்லது மருத்துவ செலவின் சுமை அவர்களை ஏழையாக்கிவிடும். இந்தச் சூழலில் மேலும் அதிகமாக வருத்தம் தரும் விஷயம் என்னவெனில் சிகிச்சைக்கான செலவு உயர்ந்துகொண்டே போவதுதான். ஒரு வீட்டின் நுகர்பொருள் செலவினத்தில் மருத்துவசேவைக்கான செலவினத்தின் பங்கு அதிகரிப்பதில் சிகிச்சைக்கான செலவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் மருத்துவசேவைக்கான செலவில் ஏறக்குறைய ஐந்தில் இரண்டு பங்கும், சொந்தச் செலவில் செய்துகொள்ளப்படும் மருத்துவசேவையில் பாதியும் சிகிச்சைக்காக செலவாகிறது. இந்தச் சூழலில், 2013ஆம் ஆண்டின் புதிய மருந்து (விலைக் கட்டுப்பாடு) உத்தரவு (டிபிசிஒ) அல்லது ஜன் அவுஷாதி கேந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து பொது (ஜெனிரிக்) மருந்துகள் திட்டத்தை விரிவுபடுத்துவது பற்றி சொல்லப்பட்டிருப்பது போன்ற மத்திய அரசின் சமீபத்திய முயற்சிகள் உண்மையிலேயே வரவேற்கத்தக்கவை. ஆனால் எந்த அளவிற்கு எதிர்பார்க்கும் பலனைத் தரும் என்பது விவாதத்திற்குரியது.

மருந்துகளின் (அத்தியாவாசிய) விலைகள் இப்போதிருக்கும் அரசாங்கத்திற்கு முன்பு இருந்த அரசாங்கங்களுக்கும் அக்கறைக்குரிய விஷயமாகவே இருந்திருக்கிறது. பல மத்திய அரசாங்கங்களால் அவ்வப்போது மீண்டும் மீண்டும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதைத் தவிர ஏழை மக்களுக்கு மருந்துகள் இலவசமாக கிடைப்பதற்கு சட்டபூர்வமாக எதுவும் செய்யப்படவில்லை. மாநில அளவில் எடுக்கப்பட்ட சில முயற்சிகள், இலவச மருந்து மற்றும் நோய்கண்டறியும் சேவைகளை வழங்கிய மாநிலங்களுக்கு தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் சில ஊக்குவிப்பு சலுகைகளைத் தந்தது ஆகியவையே இது வரை சாதிக்கப்பட்டவை. இந்தக் கொள்கை விஷயத்தில் வரலாற்றுரீதியாக பெரிதும் பேசப்பட்ட விஷயம்:  ‘’விலைக் கட்டுப்பாடு,’’. இப்போதைக்கு இது உள்நாட்டு மருந்துகள் சந்தையில் கால்பங்கிற்கும் குறைவு. இது தவிர, மருந்து விலைக் கட்டுப்பாடு குறித்த அனுபவமும் நம்பிக்கையளிப்பதாக இல்லை. 2017 நவம்பரில் தேசிய மருந்து விலை ஆணையம் புருஸமைட் மருந்தின் ஓர் அலகின் விலை ரூ. 0.29 (பிராண்ட் பெயர் லாசிஸ்), குழந்தைகளுக்கு சிறுநீர் பெருக்கியாக தரப்படுவது, என நிர்ணயித்தது. அதாவது ஒரு பாக்கெட்டிற்கு ரூ. 100 முதல் 110 வரை இருந்ததை வெறும் ரூ.10 ஆக ஆக்கியது. ஆனால் மருந்து நிறுவனங்களோ விநியோகத்தைக் குறைத்து பதிலடி தந்தன.

மறுபுறத்தில், இந்தியாவில் மருந்து விலைக் கட்டுப்பாட்டிற்கான பெரிய தடை உள்நாட்டு மருந்து சந்தையின் கட்டமைப்பில் இருக்கிறது. முதல் 10 பெரிய நிறுவனங்களிடம் மொத்த மருந்துகள் விற்பனையில் ஐந்தில் இரண்டு பங்கு இருக்கிறது. இத்தகைய அமைப்பில், புதிய டிபிசிஒ முன்மொழிந்துள்ள சந்தை அடிப்படையிலான விலைக் கட்டுப்பாடு முறையானது எந்த நிறுவனங்களை இது முறைப்படுத்த வேண்டுமோ அந்த நிறுவனங்களுக்கே சாதகமாக முடிந்துவிடும் ஆபத்து அதிகம். அதிகபட்ச விலை என்பது சந்தையில் 1%க்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கும் எல்லா பிராண்டு விலைகளின் கூட்டுத்தொகையின் சராசரியாகும். இந்த விலைக் கட்டுப்பாடு அமலுக்கு வருவதற்கு முன்னர் பெரிய நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து விலையை உயர்த்தும்பட்சத்தில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் அதிகபட்ச விலை உயர்ந்துவிடும். சந்தை அடிப்படையிலான அதிகபட்ச விலையில், மெட்பார்மின் மருந்து (இரண்டாம் வகை நீரிழிவு நோயை குணப்படுத்துவதற்கானது) டிபிசிஒ 1995 பின்பற்றும் உற்பத்தி அடிப்படையிலான விலை அணுகுமுறையின்படி மூன்று மடங்கு விலை அதிகம். உற்பத்தி விலை என்பது உற்பத்தியாளர்கள் தாங்களாக முன்வந்து வெளியிட்டது.

மறுபுறத்தில், விநியோக மேலாண்மையில் நிலவும் குறைபாடு, விலை குறைவான பொது (ஜெனிரிக்) மருந்துகள் பயன்பாடு வேகமெடுப்பதை தடுக்கிறது. கொள்முதலில் ஏற்படும் தாமதமும், ஒழுங்கற்ற விநியோகமும் மலிந்துகிடப்பதால் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஜன் அவுஷாதி கேந்திரங்கள் நிலைகுலைந்திருப்பதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வேறு பல விஷயங்களுடன் மோசமான முன் கணிப்புகள், பழங்கால கொள்முதல் முறைகள், சிறிய சந்தை போன்ற விஷயங்கள் விநியோகத்தில் பெரும் தடையை ஏற்படுத்திவிடுகின்றன. அதே நேரத்தில் பொது மருந்துகளின் தரம் பற்றி தெளிவின்மை இருப்பதால் தேவை (டிமாண்ட்) விஷயத்திலும் பிரச்னை ஏற்படுகிறது. நாட்டில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளின் முக்கியமான அங்கங்கள் மாநிலங்களால் கட்டுப்படுத்தப்படுகிறவையாக இருக்கின்ற நிலையில் அமலாக்கம் ஒரே மாதிரியான அளவுகோல்களைக் கொண்டதாக இல்லை. இந்த நிலையில், போலி மருந்துகளின் குழப்பமான மதிப்பீடுகள் கிடைக்கின்றன. பெருநகர சந்தைகளில் விற்கப்படும் மருந்துகளின் 20% தரம் குறைந்தவை அல்லது போலி என மருந்து தயாரிப்பாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் அரசாங்கமோ இது நாட்டின் மொத்த மருந்து சந்தையில் 10% என்று மதிப்பிடுகிறது. நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், குறைந்த விலை மருந்துகள் அநேகமாக போலியானவை என்ற பொதுவாக நிலவும் கருத்தை கேள்விக்குட்படுத்த முடியவில்லை.

இந்தியாவினுடைய அனைவருக்குமான மருத்துவ வசதி சட்டகம் என்பது சமத்துவம், எல்லோருக்கும் கிடைப்பது, எல்லோராலும் வாங்க முடிவது என்ற நெறிகளின் அடிப்படையில் அமைந்தது. இந்த இலக்குகளில் ஏதாவது ஒன்றை அடைவது என்பது தவிர்க்கவியலாமல் மற்றொன்றின் இழப்பிற்கு இட்டுச்செல்லும். உதாரணமாக, அனைவருக்குமான மருத்துவசேவைக்காக இப்போதுள்ள அரசாங்கம் அறிவித்திருக்கும் காப்பீடு அடிப்படையில் நிதியளிக்கும் முறையை எடுத்துக்கொள்வோம். ஏழைகளுக்கான மருத்துவசேவையை இந்தத் திட்டம் உறுதிபடுத்தும் என்றாலும் இது ஏழைகளால் தாங்கக்கூடியதாக இல்லாதுபோகலாம். அத்தியாவசிய மருத்துவசேவைக்கான நிதியாதாரங்களை பொதுத் துறை பலப்படுத்துவது போன்ற விநியோகம் சார்ந்த உத்திகள் பொருத்தமான அளவிற்கு இல்லாத நிலையில் இந்தத் திட்டம் ஏற்கனவே இந்தியாவில் மருத்துவசேவைத் துறையில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் தனியார் துறையினருக்கு லாபமாகவே முடியும். இத்தகைய சூழலில் ‘’விலைக் கட்டுப்பாடானது’’ அத்தியாவசிய மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தலாம், ஆனால் மருந்துக் கட்டுப்பாடு முறையை கட்டாயமாக பின்பற்றவைப்பது, விநியோகம் சார்ந்த மேலாண்மையை மேம்படுத்துவது, மருந்து சந்தையை புரிந்துகொள்ளுவது போன்றவற்றை விநியோகம் சார்ந்த தலையீடுகளுடன் இணைக்கிறபோது மட்டுமே இது நடக்கும். இல்லாவிடில் விலைக் கட்டுப்பாடு என்பது குறைந்தவிலை மருந்துகளை வாங்க முடிவதை குலைத்துவிடும்.

இந்த இலக்குகளுக்கு மத்தியில் சரியான சமநிலையை பேணுவது என்பது ஒரு பொருளாதார முடிவு மட்டுமல்ல அரசியல் உறுதி தொடர்பான விஷயமும் கூட. கட்டமைப்புரீதியான தடைகள் சரிசெய்யப்பட்டு, குறைந்தவிலையில் மருந்துகளையும், நோய்கண்டறிதலையும் அனைவருக்கும் கிடைக்கச்செய்யும் பட்சத்தில் இலவச அல்லது குறைந்த விலையில் மருத்துவசேவையை அரசே அளிப்பது என்பதே மக்களின் ஆரோக்கியத்தை, நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி என்பது நடைமுறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இப்போது நிகழ்ந்துள்ள மாற்றமான தேவை சார்ந்து நிதியளித்தல் என்பது மருத்துவசேவையை அளிப்பதில் தனது பங்கை குறைத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்பதையும் மருத்துசேவை அளிப்பதை தனியார் துறையிடம் விட்டுவிடும் செயல் என்பதையும் காட்டுகிறது.

Updated On : 31st Aug, 2018
Back to Top