ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

’’நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகியா’’ டிரம்ப்?

நாட்டைக் காட்டிக்கொடுப்பவர் என்று டிரம்ப் குற்றம்சாட்டப்படுவதன் உண்மையான காரணங்களை புரிந்துகொள்ள வேண்டும்.

இது எதிர்பார்க்கப்படாத விஷயம் என்று ஒருவர் சொல்ல முடியாது. இது சரியான நேரத்தில் சொல்லப்பட்டது என்றே சொல்ல முடியும். அமெரிக்க குடியரசுத்தலைவர் டொனால்ட் டிரம்ப்பிற்கும் ரஷ்ய குடியரசுத்தலைவர் விளாடிமீர் புடினுக்கும் இடையில் ஹெல்சிங்கி உச்சிமாநாடு நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னர், ஜூலை 13ஆம் தேதி அமெரிக்காவின் துணைத் தலைமை வழக்கறிஞரான ரோட் ரோஸன்ஸ்டைன் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் 12 பேர் மீது அதிகாரப்பூர்வமான குற்றச்சாட்டை வெளியிட்டார். ஜனநாயக தேசியக் குழுவின் இணைய வழங்கிகளில் (servers) அத்துமீறி நுழைந்து ஹிலாரி கிளின்டனின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவரான ஜான் பொடஸ்டாவின் மின்னஞ்சல்களைத் திருடி விக்கிலீக்ஸுக்கு அளிக்க, அவற்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டது என்று தனது குற்றச்சாட்டில் ரோஸன்ஸ்டைன் கூறியுள்ளார். ’’அமெரிக்க ஜனநாயகத்தை ரஷ்யா நிலைகுலையச் செய்துவிட்டது’’ என்பதை மறுக்கப்பட முடியாத வகையில் நிரூபணமாகிவிட்டது என ஜனநாயக கட்சியினர், அமெரிக்க ஊடகங்கள் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகள் கூறுகின்றன.

2016 அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக சொல்லப்படும் இந்த அதிகாரப்பூர்வமான குற்றச்சாட்டு ஆணித்தரமாக சொல்லப்படுகிறது, ஆனால் ஆதாரங்கள் அதிகமில்லை. இது ஒரு பிரச்னையாகவே இல்லை. ஏனெனில், டிரம்ப்பை முத்திரைகுத்துவதற்கான ஜனநாயக கட்சியினர், பெரும் ஊடகங்கள், உளவுத்துறை ஆகியவற்றின் பிரச்சாரம் ஏற்கனவே நன்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டது. மேலும் விக்கிலீக்ஸ் குற்றம்சாட்டப்பட்டிருப்பதன் காரணமாக அதன் நிறுவனர் ஜூலியன் அஸாஞ்க்கு எதிராக தாங்கள் நடத்திவரும் பிரச்சாரம் இப்போது மேலும் நியாயப்படுத்தப்படும் என்று ஜனநாயக கட்சியினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். மத்திய புலனாய்வுக் கழகம் (சிஐஏ) செய்த சித்திரவதைகள், அமெரிக்க குடிமக்களை தேசிய பாதுகாப்புக் கழகம் (என்.எஸ்.ஏ) வேவு பார்த்தது, இது எட்வர்ட் ஸ்நோடவுனால் அம்பலப்படுத்தப்பட்டது, ஆகியவற்றின் காரணமாக உளவுத்துறை அம்பலப்பட்டு நிற்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் குற்றங்களை வெளியுலகிற்கு தெரியவைத்த நாயகனும் உண்மையான ஜனநாயகவாதியுமான ஸ்நோடவுனிற்கு 2020 வரை ரஷ்யா தஞ்சமளித்திருக்கிறது என்பதை நாம் இங்கு நினைவூட்டிக்கொள்வது பொருத்தமற்றதாக இருக்காது.

ஜூலை 16 ஹெல்சிங்கி சந்திப்பில் டிரம்ப்-புடின் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம் பற்றி அதிகம் செய்திகள் வெளியாகவில்லை என்பது ஆர்வத்தைக் கிளறும் விஷயம். தான் இது வரை கண்டதிலேயே ’’அதிகபட்ச அவமானகரமாக நடந்துகொண்ட அமெரிக்க குடியரசுத்தலைவர்’’ டிரம்ப்தான் என தனது பார்வையாளர்களிடம் கூறினார் சி.என்.என். செய்தியாளார். 2016 அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு பற்றி அமெரிக்காவின் உளவுத்துறைகள் கூறியதை விட்டுவிட்டு புடின் கூறியதை டிரம்ப் ஏற்றுக்கொண்டதை அமெரிக்காவின் ஆளும்தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது நன்கு தெரிகிறது. ரஷ்யாவின் வெளிவிவகார உளவுத்துறையான கேஜிபியின் முன்னாள் அதிகாரியான புடின், டிரம்ப்புடன் இணைந்து கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ரஷ்யாவின் தலையீடு பற்றி அமெரிக்க புலனாய்வை ஒதுக்கி புறந்தள்ளியதுடன், முன்னாள் உளவுத்துறை அதிகாரியான தனக்கு ‘’இத்தகைய கோப்புகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன’’ என்பது தெரியுமென்று புடின் கூறினார்.

பாரக் ஒபாமா குடியரசுத்தலைவராக இருந்தபோது சிஐஏவின் இயக்குனராக பணியாற்றிய ஜான் பிரென்னனை பொறுத்தவரை ’’ஹெல்சிங்கியில் டிரம்ப் செய்த குற்றங்கள் பெரிய குற்றங்கள் மற்றும் தவறான நடத்தைகளுக்கான எல்லையை மீறிவிட்டன. இது தேசத்துரோகம்.’’ இதை வழிமொழிந்த நியூ யார்க் டைம்ஸ் நாளிதழின் பத்தி எழுத்தாளரான தாமஸ் ஃப்ரீட்மேன் டிரம்ப்பை ‘’ரஷ்ய உளவுத்துறையின் சொத்து’’ என்று வர்ணித்தார். ‘’எனது சக அமெரிக்கர்களே…நீங்கள் டிரம்ப் மற்றும் புடினுடன் இருக்கிறீர்களா அல்லது சிஐஏ, எப்.பி.ஐ. (பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்) மற்றும் என்.எஸ்.ஏ.வுடன் இருக்கிறீர்களா?’’ என்றும் ஃப்ரீட்மேன் கேள்வி எழுப்பினார்.

தாரளவாதிகள், அதிலும் வலதுசாரி அரசியலைச் சேர்ந்த தாராளவாதிகளே கூட உளவுத்துறையினரின் பக்கம் நிற்க வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். இந்த விவகாரத்தில் டிரம்ப்பை ஆதரிப்பது அல்லது அமெரிக்க அரசிற்குள் ‘’ஆழமான அரசாக’’ இருக்கும் அமெரிக்க உளவுத்துறையை ஆதரிப்பது என்ற இரண்டிற்குள் அடைபட வேண்டுமா? இதே உளவுத்துறைகள் ஈராக் மீது போர் தொடுக்கப்படுவதை நியாயப்படுத்த ’’பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள்” ஈராக்கிடம் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறவில்லையா? இதே உளவுத்துறைகள் அமெரிக்க குடிமக்களை வேவு பார்க்கவில்லையா? இதே உளவுத்துறைகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய நாடுகளில் தனது அரசியல் எதிரிகளைக் கொல்ல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதைப் பற்றி துளியும் கவலைப்படாது இருக்கவில்லையா?

2016 அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலில் ரஷ்யாவில் தலையீடு குறித்து அமெரிக்க உளவுத்துறைகள் கூறியதை ஏற்றுக்கொள்ளாது புடினின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டது பற்றிய மிகையுணர்ச்சி கொண்ட இந்தப் பழித்தல்களுக்கெல்லாம் பின்னாலிருப்பது ரஷ்யாவுடனான அமெரிக்காவின் உறவு எப்படியிருக்க வேண்டுமென்பது குறித்து அமெரிக்காவின் ஆளும் தரப்பில் நிலவும் அடிப்படையான பிளவே. ரஷ்யாவிற்கு எதிராக ஆக்ரோஷமான வெளியுறவுக்கொள்கையை பின்பற்ற வேண்டுமென டிரம்ப்பின் எதிர்ப்பாளர்கள் கோருகின்றனர். சோவியத் யூனியன் மறைந்ததன் காரணமாக மேற்காசியா, மத்திய ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் புவியரசியலில் அதிகார வெற்றிடம் உருவாகியுள்ளது. இந்த நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்த அமெரிக்க முயல்கிறது. இந்தப் பகுதிகளில் சோவியத் யூனியன் ஆக்ரமித்திருத்த இடத்தை ரஷ்யாவை பலவீனப்படுத்திவிட்டு தான் பிடிக்க அமெரிக்க முயல்கிறது. தனது இலக்குகளை அடைய வலதுசாரி, அடிப்படைவாத, தீவிரவாத சக்திகளை எங்கெல்லாம் பயன்படுத்த முடியுமோ அங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறது அமெரிக்கா. ஈராக், சிரியா, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளின் மோதல்களில் பிற்போக்கு அரசியல் இஸ்லாமையும், உக்ரைனில் உள்ளூர் ‘’பாசிஸ்ட்’’ சக்திகளையும் அமெரிக்கா பயன்படுத்தியது. ரஷ்யா, சீனா, ஈரான் இடையேயான பாதுகாப்பு கூட்டணி விஷயத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது என்பதில் அமெரிக்க ஆளும்தரப்பிடம் ஆழ்ந்த கருத்து வேறுபாடு நிலவுகிறது. ரஷ்யாவுடன் தற்காலிக நேசம் பாராட்டும் டிரம்ப்பின் உத்தியை அமெரிக்க ஆளும்தரப்பின் பெரும்பான்மையினர் வெறுக்கின்றனர்.

ஆளும்தரப்பிலுள்ள இத்தகைய உண்மையான வேறுபாடுகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டு அமெரிக்காவின் தேசிய நலன்களை புடினுக்கு விற்கிற தேசத்துரோகியாக டிரம்ப் முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்.

Back to Top